பார்த்து “உமக்கு வயது 42 தான்; அதற்கு மேல் உள்ளதெல்லாம் மறுசென்மங்கள்;
ஒரு பிறப்பிலே மறு சென்மங்கள் பல எடுக்கலா மென்பதற்கு விதியுள்ளது; நீர் 2-3
முறை இயமனை ஏமாற்றியிருக்கிறீர்; 2-3 மறுசென்மங்மள் எடுத்திருக்கிறீர். புராண
உரை முடியும் வரை உமது ஆயுள் நீடிக்கும்” என்று தைரியங் கூறினார். எது
எவ்வாறாயினும் பெரியபுராண உரை எழுத்து நிறைவுகாணும்படி அடியேனுக்கு
அறிவும் ஆற்றலும் ஆயுளும் இறைவர் அருள் செய்தார் என்பது உண்மை.
இவ்வழிபாட்டுக்குதவியருளிய தில்லைவாழந்தணர்களுக்கும், மற்றும் அடியார்கள்
எல்லாருக்கும் அடியேனது வணக்கம் உரித்தாகுக.

     இனி, இதன் அச்சின் நிலை வேறு; இப்போது 2500 பாட்டுக்கள் வரை
அச்சேறியுள்ளன. இனியும் 1780 பாட்டுக்கள் உரை அச்சேற உள்ளன. அவை 26
சஞ்சிகைகள் வரை ஆகும். அச்சுவேலைக்கு உள்ள முட்டுப்பாடுகள் பல;
காகிதமின்மை பெருந்தொல்லை; அச்சுக்கும் பிற சாதனங்களுக்குமாக உள்ள
நிதியின்மை முதலிய சங்கடங்களும் உண்டு. முன் இருந்த அளவுக்கு 4 மடங்கு
தொகை இப்பொழுது நிலவரப்படி வேண்டியிருக்கின்றது. அடியேனது
எழுத்துப்பணியுடன் எனது கடமையினை ஒருவாறு நிறைவேற்றியுள்ளேன். இதுவரை
அச்சுவேலைகளில் உதவியும், காகிதம், புரூப்கள் திருத்தியும், மற்றும் பற்பல உதவி
வாங்கி உதவியும், செய்தும் உதவிய பெருமக்கள் எல்லாருக்கும் அடியேன்
கடப்பாடுடைய நன்றி செலுத்துகிறேன். இவ்வுரை எழுத்துப்படி சைவவுலகத்துக்
குரித்தாகும். இனி இப் புராண உரை அச்சுவேலை நிறைவேறிச் சைவத்தமிழ் உலகிற்
பரவிப் பயன்படும் நிலை சைவவுலகத்தைச் சார்ந்தது.

இறைவரருள் சிறக்க. சேக்கிழார் சேவடி வாழ்க.
 

இராசசபை - சிதம்பரம்;
அடியேன்
ஆனித் திருவிழா 12-7-48
C.K.சுப்பிரமணிய முதலியார்.
சர்வதாரி ஆனி 29-ம் தேதி திங்கட்கிழமை