இறுதிப் பகுதியாகிய இவ்வேழாம் பகுதிக்குப் பேராதரவும் பரிசுமாகப் பலர் வழங்கிய
உதவிகளை இங்கே நன்றியுடன் தெரிவிக்க வேண்டியதவசியம். சென்னைப்
பல்கலைக்கழகத்தார்கள் தொடக்கத்தில் 1000 ரூபாய்கள் நன்கொடை தந்து
இவ்வெளியீட்டினைத் தொடங்கி வைத்து ஆதரித்தார்கள். அதுபற்றி முன்னமே
அறிவித்துள்ளேன். இப்போதும் புராண உரைநிறைவின்போது 1000 ரூபாய் பரிசிலாகத்
தந்து, அதனைத் தங்கள் பிரதிநிதியாக அங்கத்தினர் திவான்பகதூர் - திரு. T. M.
நாராயணசாமி பிள்ளை எம், ஏ., பி. எல். அவர்களை அனுப்பி நிறைவு விழாவிற்
பொது மக்களின் திருக் கூட்டத்தின் முன்பு வழங்கச் செய்து கௌரவித்தார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு. சர். A. லட்சுமணசாமி முதலியார்
அவர்கள் என்னிடத்தில் மிக அன்பு பூண்டவர்கள். இவ்வுரையின் நிறைவு காண்பதில்
ஆர்வமுள்ளவர்கள். நிறைவு விழாவுக்கு அவர்கள் நேரில் வரக்கூடாதபடி (Geneva)
ஜெனிவா நகரத்தில் ஒரு பெருங்கூட்டத்தில் பணியாற்றச் செல்ல நேரிட்டமையால்
தமது நண்பராகிய மேற்படி திரு. T. M. N. பிள்ளை யவர்களை நேரில் இப்பரிசு
வழங்கச் செய்தமை தமிழுலகுக்கும் சைவ வுலகத்திற்கும் அவர்செய்த பெருங்
கௌரவமாகும். இனி, எனது பெரு நண்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
துணை வேந்தராயிருந்து காலஞ் சென்ற திரு. சர். R. K. சண்முகம் செட்டியார்
அவர்களும் இவ்வுரை நிறைவு காணும் நிலையில் மிகவும் அக்கரை கொண்டார்.
அதனால் VII பகுதி முடிக்கும் பொருட்டென்றே குறியிட்டு 1500 ரூபாய்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து நன்கொடையாக உதவினார்கள்.
அவர்கள் இவ்வுரை நிறைவு விழாவின் முன் காலஞ்சென்றுவிட்டமை பற்றிப் பெரிதும்
வருந்துகின்றேன். இனிக், கோயமுத்தூரில் எனது நீண்ட கால நண்பரும்,
பெருநிலக்கிழாரும், கௌரவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தலைவருமாகிய திரு. C. N.
நாகப்ப கவுண்டர், B.A., B.L., அவர்கள் தாமாகவே இவ் வேழாம் பகுதிக்கு 500
ரூபாய் மனமுவந்து உதவினார்கள். இதுபற்றி முன்னமே அறிவிப்புச்
செய்திருக்கின்றேன். இனிக், கோவையில் பெருநிலக்கிழாரும் என் நண்பருமாகிய திரு.
N. கோனே கவுண்டர் அவர்கள் இதற்கு ரூபாய் 250 நன்கொடை யளித்தார்கள்.
இவ்விரு பெருமக்களும் தங்கள் ஆர்வ மிகுதியால் தமர்களுடன் திருத்தில்லை
போந்து நிறைவு விழாவையும் சிறப்பித்தார்கள். எனது மற்றுமொரு நண்பர் கோவை -
திரு. ஸ்ரீமான் நாதமுனிக் கவுண்டர் அவர்கள். 50/- (ஐம்பது) ரூபாய் தாமாகவே
நன்கொடை அளித்தார்கள். மேலே குறித்த எல்லாருக்கும் எனது கடப்பாடுடைய
நன்றிஉரியது.
 

பிரிவாற்றாமை
 

இந்த வெளியீடு தொடங்கியபின் இதில் மிகுந்த ஆர்வங்கொண்ட பல
அன்பர்கள் பிரிந்துவிட்டார்கள். அவர்களை எண்ணும்போது மனம் பெரிதும்
வருந்துகின்றது. அவர்களுட் பலபேர் இவ்வுரையின் நிறைவு காண்பதில் என்னினும்
மிக்க ஆர்வத்தோடிருந்தனர். சிலர் “நாங்கள் எல்லாரும் கண்டுகளிக்கும்படி
இவ்வுரையை விரைவில்