முடியுங்கள்’ என்றார்கள். சிலர், "முதற்பகுதியின் முன்னுரையில் 12-12-ஆண்டு
எல்லையாகமூன்று பாகங்கள் கூறியதுபோல இதற்கும் 12ஆண்டுகள் கூறுவீர்களோ"
என்றார்கள். மற்றும் சிலர், உரையைச் சுருக்கி முடிக்கும்படி வேண்டினார்கள்.
இவ்வாறு பேராவலுடன் விரும்பிய அன்பர்கள் பலரும்பிரிந்துவிட்டார்கள். ஆனால்
அவர்களுடைய இன்னுயிர்கள் பரமுத்தி தலைக் கூடாவிட்டால், இப்போது எந்தப்
பிறவியிலோ எந்த உலகிலோ சஞ்சரித்துக் கொண்டுதானிருக்கும். அவர்கள் எண்ணிய
இந்த விருப்பங்கள் கன்ம சேடங்களாகையினாலே, "எங்கேனும்யாதாகிப் பிறந்திடினும்
தன்னடியார்க், கிங்கேயென் றருள்புரியுமெம்பெருமான்" என்றபடி, அவ்வுயிர்கள்
எங்கெங்கே எவ்வாறிருப்பினும் அங்கங்கே கன்ம சேடங்களை அனுபவிக்கும்படி
செய்வான் இறைவன் என்பது ஞானநூல்களின் துணிபாம். ஆகையினாலே இந்த
அன்பர்கள் அங்கங்கிருந்தேயும் இந்நிறைவு விழாவினைக் கண்டு அமைதிபெறும்படி
இறைவன் அருள்புரிவாராக. இனி, இவ்வாறு பிரிந்தோர்களுள்ளே உரைப்பணியில்
பெருவிருப்பங் கொண்டு அரியபெரிய ஊக்கத்தையும் உதவிகளையும் புரிந்த
பெருமக்களின் பெயர்களை யெண்ணும் போது, முதலில் எண்ண வருவது,
சிதம்பரத்தில் வாழ்ந்த, சூரியனார் கோயிலாதீனம் ஸ்ரீமத் முத்துக்குமார முனிவர்
பெருமானுடைய திருப்பெயரேயாகும்; இப்பெருமானை முன்னர் நான் நெருங்கிப்
பழகிக்கொள்ளவில்லை. ஆனாலும் 1935-ம் ஆண்டு இப்பேருரையின் முதற்
சஞ்சிகையினை வெளியிட்டு அரங்கேற்றியபோது வந்திருந்த சிறு கூட்டத்தில்
கருணையினால் அவர்களும் வந்து எழுந்தருளியிருந்து அச்சஞ்சிகையினைக்
கண்காணித்தார்கள். முதல் சஞ்சிகையில் பலதிறத்தனவாகிய பிழைகளும்
விரவியிருத்தலைக் கண்டு பரிவு கூர்ந்தார்கள். உயர்ந்ததும் நிலைத்ததும் ஆயின
திருப்பணியாகிய இது இயன்ற அளவில் பிழைகளில்லாமல் நன்றாய்
வெளியிடவேண்டுமே என விரும்பினார்கள். என்னைத் திருத்துபவர்கள்
வேறில்லாமையால், திருத்துமாறு அவர்களையே வேண்டிக்கொண்டேன். அவர்களும்
கருணையினாலே இசைந்தார்கள். அது முதல் ஏயர்கோன் கலிக்காம நாயனார்
புராணம் 234வது பாட்டு வரையில் அவர்களுடைய அரிய திருத்தங்களுடன் உரை
வெளிவந்திருக்கிறது என்பதை நீங்களெல்லாரும் அறிவீர்கள். அதுவேயுமன்றி,
அடியேனைப் பல மாதங்கள் சிதம்பரத்தில் தங்கச் செய்து, ஸ்ரீமாதவச் சிவஞான
யோகிகளது சிவஞானபோதச் சிற்றுரையினையும், மாபாடியம் என்னும்
பேருரையினையும் பெருங் கருணையினாலே பரம்பரைக் குருமரபுப்படி
அடியேனுக்குப் போதித்து உபதேசித்தும் அருளினார்கள். அவர்கள் இறைவன்
திருவடி எய்திவிட்டபடியால் அதற்கு மேலுள்ள பகுதியில் அவர்களின் அருமையான
திருத்தங்கள் பெற இயலாமலிருந்தது பற்றி என்னுடைய துயரத்தை முன்னமேயே
அன்பர்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறேன். சிதம்பரத்திலிருந்த ஸ்ரீமத்
செப்பறைச் சுவாமிகளின் மாணாக்கர், பறங்கிப்பேட்டை வித்துவான் திரு.பெரியசாமி
பிள்ளை அவர்களும், பச்சையப்பன் ஹைஸ்கூல் தமிழாசிரியராயிருந்த வித்துவான் -