- Viii -
7. வேதவேள்வியை, 8. ஆலநீழல்; 9. மங்கையாக்கரசி என்னும்
பதிகங்களையும், திருநாவுக்கரசுகள் பாடிய 1. வேதியா, 2. முளைத்தானை
என்னும் பதிகங்களையுங் கொண்டு திகழ்வது. உலகெலா மீன்ற
மலைமகளாரும், மறைகளுந் தேறாக் களைமிடற்றிறையும், குன்ற மெறிந்த
வென்றிவேற் பரனும் அரசு வீற்றிருந்து முறை செய்யப் பெற்றது
இப்பதியென்றால் இதனை யொப்பது வேறெப்பதி? இப்திருப்பதியிலே
கருணைக் கடலாகிய சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அற்புதமான
அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் போலும் பொற்பு மிக்க வரலாறுகள்
வேறெவ்விடத்து நிகழ்ந்தனவாகக் கேட்டலரிது.

இத் திருவிளையாடற் கதைகளை யெடுத்துக்கூறும் தமிழ் நூல்கள்
அளவற்றன. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது, கடல்சுவற வேல் விட்டது,
இந்திரன் முடிமேல் வளை யெறிந்தது முதலியன சிலப்பதிகாரத்திலும்;
இந்திரன் பழி தீர்த்தது, திருமணஞ் செய்தது, வெள்ளி யம்பலத்
திருக்கூத்தாடியது, அன்னக்குழியும் வையையும் அழைத்தது,
ஏழுகடலழைத்தது, உக்கிர குமார பாண்டியர் திருவவதாரம், கடல் கூறை
வேல்விட்டது, கல்லானைக்குக் கரும்பருத்தியது, அங்கம் வெட்டியது,
வளையல் விற்றது, சோழனை மடுவில் வீட்டியது, மாமனாகவந்து
வழக்குரைத்தது, விறகு விற்றது, திருமுகம் கொடுத்தது, கரிக்குரு விக்கு
உபதேசித்தது, தருமிக்குப் பொற்கிழியளித்தது, இடைக்காடன் பிணக்குத்
தீர்த்தது, வலை சீவியது, நரியைப் பரியாக்கினது, மண் சுமந்தது முதலியன
கல்லாடத்திலும்; நான்மாடக் கூடலானது, சங்கப் பலகை தந்தது, தருமிக்குப்
பொற்கிழியளித்தது, வலை வீசியது, பாண்டியன் சுரந் தீர்த்தது, சமணரைக்
கழுவேற்றியது முதலியன தேவராத்திலும்; வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது,
மெய்க்காட்டிட்டது, அட்டமாசித்தி யுபதேசித்தது, தண்ணீர்ப் பந்தல் வைத்தது,
பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தது, கரிக்குருவிக்கு உபதேசித்தது, வலை
வீசியது, வாதவூரடிகளுக்கு உபதேசித்தது, நரியைப் பரியாக்கியது, மண்
சுமந்தது முதலியன திருவாசகத்திலும் எடுத்தோதப் பெற்றன.

திருவிளையாடல்களை உணர்த்தும்பொருட்டே யெழுந்த தமிழ் நூல்கள்
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், கடம்பவன புராணம், சுந்தர
பாண்டியம், திருவிளையாடற் புராணம் என்பனவும், வேறு சிலவுமாம்.
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்பது செல்லிநகர்ப்
பெரும்பற்றப் புலியூர் நம்பி யென்பவரால் இயற்றப் பெற்றது; இது
வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும், பழைய திருவிளையாடல் எனவும்
வழங்காநிற்கும். கடம்பவன புராணம் என்பது தொண்டை நாட்டிலுள்ள
இலம்பூரிலிருந்த வீமநாதபண்டிதர் என்பவரால் இயற்றப் பெற்றது. சுந்தர
பாண்டியம் என்பது தொண்டை நாட்டிலுள்ள வாயற்பதியிலிருந்த
அனதாரியப்பன் என்னும் புலவரால் இயற்றப் பெற்றது. திருவிளையாடற்
புராணம் என்பது பரஞ்சோதி முனிவரால் இயற்றப் பெற்றது. இவற்றுள் நம்பி
இயற்றியதும், பரஞ்சோதியார் இயற்றியதும் ஆகிய இரு நூல்களும் அறுபத்து
நான்கு திருவிளையாடல்களையும் செவ்வையாக விரித்துரைப்பன. இவற்றுள்
முன்னதினும் பின்னது ஏறக்குறைய இருமடங்கு விரிவுடையது.

இவ்விருநூல்களுள் ஒன்றனோடு மற்றொன்றற்குள்ள வேறுபாடுகள் பல.
இந்நூலிலுள்ள வருணன் விட்ட கடலை வற்றச் செய்த வரலாறு