வாழ்த்து

[அறுசீரடியாசிரிய விருத்தம்]

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்க ளெங்கும் பரவுக வறங்க ளின்பம்
நல்குக வுயிர்கட் கெல்லா நான்மறைச் சைவ மோங்கிப்
புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

(இ - ள்.) வேத வேள்வி - வேதத்திற் கூறப்பட்ட
வேள்விகள், மல்குக - நிரம்புக; வானம் - முகில்கள், சுரந்து
வழங்குக - நீரினைச் சுரந்து பொழிக; எங்கும் - எவ்விடத்தும்,
வளங்கள் பல்குக - செல்வங்கள் பெருகுக; அறங்கள் பரவுக -
தருமங்கள் பரவுக; உயிர்கட்கு எல்லாம் - எல்லா வுயிர்கட்கும்,
இன்பம் நல்குக - இன்பம் அளிக்கப்படுக; உலகம் எல்லாம் -
உலக முழுதும், நான்மறைச் சைவம் - நான்கு வேதங்களின் துணி
பொருளாகிய சைவ சமயமானது, ஓங்கிப் புல்குக - தழைத்தோங்கி
நிலைபெறுக; புரவலன் - அரசனது, செங்கோல் வாழ்க - செவ்விய
கோல் வாழ்க எ - று.

வேள்வி வேதத்திற் கூறப்பட்டதாகலின் ‘வேத வேள்வி’
எனப்பட்டது. ‘வேத வேள்வியை’ என்பது தமிழ் மறை.
வேள்வியால் மழையும், மழையால் வளமும், வளத்தால் அறமும்
இன்பமும் உளவாகலின் அம்முறை வைத்து, உலகியலின் வேறாகிய
ஈறிலின்பம் எய்துதற்குரிய சைவ நெறியை அவற்றின் பின் வைத்து,
அவை யனைத்திற்கும் அரணாக வுள்ளது அரசன் செங்கோலாகலின்
அதனை இறுதிக்கண் வைத்து வாழ்த்துக் கூறினார். நல்கப்படுக
எனற் பாலது படு சொற்றொக்கு நல்குக என நின்றது. ‘அமரர்கண்
முடியு மறுவகையானும்’ என்னும் தொல்காப்பியப் புறத்திணையுயற்
சூத்திர வுரையில் ‘முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும்
முடியுடை வேந்தரும் உலகும்’ என்னும் ஆறனையும் அமரர்கண்
முடியும் அறுமுறை என்பர் நச்சினார்க்கினியர். இஃது ஆளுடைய
பிள்ளையார்
அருளிய,

"வாழ்க வந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமல னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே"

என்னும் பரசுரத்தின் பொருளோடு பெரிதொத்துச் சிறிதொவ்
வாமை காண்க. இந்நூலாசிரியர் வேள்வி என்பதனால் அவ்வாறனுள்
அந்தணர் வானவர் ஆனினங்களைப் பெற வைத்து, வானம்
என்பதனால் மழையையும், புரவலன் என்பதனால் வேந்தனையும்
கிளந்து கூறி, ஏனைப் பகுதிகளால் உலகினை யெடுத்தோதி
வாழ்த்தின ரென்க. உலகமெல்லாம் சைவ மோங்கி்ப் புல்குக
என்றதும் உயிர்களெல்லாம் பேரின்ப மெய்த வேண்டுமென்னும்
கருத்துப் பற்றியாகலின் உலகினை வாழ்த்தியதேயாயிற்று. (1)


 

மேல்

மூலம்