இங்கொன்றும், அங்கொன்றுமாகக் காவியத்தை நான் படித்தபோது,
அதனுடைய கருத்தாழத்தையும் தமிழ் இனிமையையும் காணமுடிந்தது. குறிப்பாக,
கீழ்வரும் பாடலைப் படிக்கும் போது, சுவைக்கச் சுவைக்கத் தீஞ்சுவை குன்றா
அமுதாக இருப்பதைக் காணலாம்.

ஓங்கியவர் தீன் நெறியை ஓத ஓத

ஓங்கியதே எங்கெங்கும் அறத்தின் மாண்பே

பாங்குடையோர் அருள்மொழியை ஓத ஓதப்

பரவியதே எங்கெங்கும் புனித வாழ்வே! 

ஆங்கினியோர் இறை நெறியை ஓத ஓத

அரும்புவியோர் விண்ணருளால் ஒளியர் ஆனார்

ஏங்கியவர் எந்நலமும் பெற்றார் அண்ணல்

எழில்நாவால் இறைமொழியை ஓதுங்காலே! (20)

இது போன்று சுவைபட வரும் பாடல்கள் ஏராளம், ஏராளம்.

தம் சமயமன்றி, பல் சமயங்களிலும் காப்பியம் இயற்றி இமயம் போல் 
உயர்ந்து நிற்கும் நம் காப்பியத் தம்பதியரை “காப்பியச் சிகரங்கள்” என 
அழைத்து மகிழ்கின்றேன்.

தமிழ்கூறு நல்லுலகம் அன்னாரின் படைப்பை வரவேற்றுச் சிறப்பளிக்குமாறு
வேண்டுகிறேன். அவர்தம் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டி நிற்கின்றேன்.

ஒப்பம்
Most Rev. Dr. S. மைக்கேல் அகஸ்டின்
புதுவை - கடலூர் பேராயர்.