அரேபியாவிலிருந்தவர்களையும் அண்டை நாட்டவர்களையும் இசுலாத்தில்
சேர அழைத்தார். தம் வாழ்நாளிலேயே அங்கெல்லாம் இசுலாத்தைப் பரவச்
செய்தார். கலிமா மொழிதல், தொழுகை, நோன்பு, கட்டாயக் கொடை (ஸக்காத்)
மக்காவிற்குப் புனிதப்பயணம் செல்லுதல் (ஹஜ்) எனும் ஐந்தையும் இறைவன்
பணித்தவாறு இசுலாமியர்கட்குக் கடமையாக்கினார். உருவங்களைத் தொழுதும்,
குடித்தும், கொலைசெய்தும், விலைமாதர்களை மருவியும் வெறிகொண்டுழன்ற
மக்களை ஓரிறையைத் தொழுது ஒழுக்க வாழ்வு வாழச் செய்தார். பல இனம், பல
நெறி எனப் பாகுபட்டுக் கிடந்தவர்களை ஓரினமாக்கி ஒரே நெறியில் நிற்கச்
செய்தார். எண்ணிய எண்ணத்திலும் எடுத்த காரியத்திலும் தாம் வாழ்ந்த
காலத்திலேயே வெற்றிகள் கண்டார்.

“நாம்தான் குர்ஆன் என்னும் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம்.
ஆகவே அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் எற்படாதவாறு உறுதியாக நாமே
அதனைக் காத்துக் கொள்வோம்” என்பன இறைவனின் திருமொழிகள். இறைவன்
ஆணைப்படி உலகில் மிக உயர்ந்த ஒரு நெறியை நிறுவி, அதற்கென வகுக்கப்பட்ட
திருமறை என்றும் நின்று நிலவும் என்னும் உறுதியை அவனிடமே பெற்றுத்
தமக்கிட்ட பணியை முழுமையாக நிறைவேற்றி அவனிடமே மீண்டார் அண்ணல்
முகம்மது.

நபி வரலாற்று நூல்கள்:

அரபு மொழியிலிருந்த அவருடைய இவ் வாழ்க்கை வரலாற்றை உமறுப்புலவர்
முதன் முதலில் தமிழில் “சீறாப் புராணம்” எனும் காவியமாகப் படைத்தார். இதன்
பின்னர் நபிகள் நாயகத்தின் முழு வரலாறு அல்லது வரலாற்றின் சில பகுதிகள்
கவிதை வடிவில் தமிழில் படைக்கப்பட்டுள்ளன. சதாவதானி செய்கு தம்பி பாவலர்
அவர்கள் “நபிகள் நாயக மான்மிய மஞ்சரி” என்றதொரு கவிதை நூலை எழுதினார்.
பனைக்குளம் அப்துல் மஜீத்து எழுதியுள்ள ‘நாயக வெண்பா’, ஸிராஜ் பாக்கவி
அவர்களின் “நெஞ்சில் நிறைந்த நபிமணி”, கலைமாமணி கவி.கா.மு. ஷெரீப்
அவர்கள் படைத்துள்ள “நபியே எங்கள் நாயகமே”, புலவர் முகம்மது மைதீன்
எழுதியுள்ள “நாயகப் பேரொளி” , கவிஞர் மேத்தாவின் “நாயகம் ஒரு காவியம்”,
சொற்சித்தர் வலம்புரி ஜான் எழுதியுள்ள “நாயகம் எங்கள் தாயகம்” எம்.ஆர்.எம்.
அப்துற்றஹீம் எழுதியுள்ள ‘நாயக காவியம்’ போன்ற கவிதை நூல்கள் நாயக
வரலாறு கூறுவனவாகத் தமிழில் எழுந்துள்ளன. இவ்வரிசையில் இப்போது புதுவைக்
கவிஞர் திரு, மாலிறையன் அவர்கள் “இறைபேரொளி நபிகள் நாயகம் அருட்
காவியம்” எனும் அருமையானதொரு காவியத்தை நமக்குப் பைந்தமிழில்
படைத்திருக்கின்றார்.