உமறு வழியில் திருமாலிறையன் :

உமறுப்புலவரின் சீறாவை அடியொற்றியே கவிஞர் திருமாலிறையன்
இக்காவியத்தைப் பாடியுள்ளார்; தம் அவையடக்கப் பாடலில் இதனை

இருள்துணிந்(து) ஒளியைப் பார்க்க எண்ணிய தன்மை போல
மருள்திணிந்(து) உள்ள நெஞ்ச மனிதன்யான் உமறு கண்ட
பொருள்துணிந்(து) ஒளிமுன் நின்று புகழ்ந்திடப் பட்டோன் மாண்பின்
அருள்பணிந்(து) இதனைச் செய்தேன். . . . .

எனக் குறிப்பிட்டுள்ளார். உமறுப்புலவர் விலாதத்துக் காண்டம், நுபுவத்துக்
காண்டம், ஹிஜுரத்துக் காண்டம் என மூன்று காண்டங்களில் 5028 பாடல்களை
இயற்றிக் காப்பியத்தை நிறைவு செய்யாமலேயே மறைந்து விட்டார். திருமாலிறையன்
அவர்கள் 1. புவிபுகல் காண்டம். 2. ஒளிபெறல் காண்டம். 3. புலம் பெயர்காண்டம்
4. களம்புகல் காண்டம் 5. வான்புகல் காண்டம் எனும் காண்டப் பிரிவுகளில் 2649
பாடல்களில் வரலாற்றை நிறைவு செய்துள்ளார்.

தமிழ் நெஞ்சம் :

இசுலாமியத் தமிழ்க் காப்பியங்களில் இறைவன், நபிகள் நாயகம், கலீபாக்கள்
என அச்சமயச் சார்புள்ளவர்களை வாழ்த்தி அவையடக்கம் நூலின் பொருள்
முதலிய பாடுவது மரபாயுள்ளது. கவிஞர் திருமாலிறையன் இறைவாழ்த்தில் தமிழ்
வணக்கத்தையும் சேர்த்துப் புதுமை கூட்டியுள்ளார்.

“நபிகள் கோனின் நல்லிசைப் பெருமை பாட நயத்தொடு முன்னிற்பாயே”
எனத் தமிழன்னையை வேண்டுகிறார்.

சமய இணக்கத்திற்கும், நட்பிற்குமாக இப் பனுவலைச் செய்திருக்கிறார்.

தமிழ், தமிழர் பெருமையை வாய்க்குமிடமெல்லாம் கவிஞர் தக்கவாறு
எடுத்துரைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாக அமைகிறது. வீதியில் பெருமிதத்தோடு
நடந்து செல்வது, தமிழ் மன்னரின் செம்மாந்த நடையை ஒத்திருந்தது எனச்
சொல்லும் பாடல் உள்ளம் கொள்ளை கொள்வதாய் உள்ளது.

“வான்முகில் குடையை ஏந்த வான்சிறைப் பறவைக் கூட்டம்
தான்எழிற் கவரிவீசத் தகுமலர்ச் சோலைப் பூக்கள்
தேன்பனி நீர்தெளிக்கத் தென்தமிழ் நாட்டு வேந்தர்
கோன்வரு வதனைப் போலக் கோமகன் வருகை தந்தார்”