கொண்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு
காப்பியங்கள் பாடிய கவியரசர்களும் தமிழில் உண்டு.
சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவர், திருமணக்காட்சி பாடிய சேகாதி
நயினார், சின்ன சீறா பாடிய பனீ அகமது மரைக்காயர், புதூகுஷ்ஷாம் புனைந்த
சேகனாப் புலவர், ஆகியோர் கடந்த நூற்றாண்டுகளில் நபிகள் நாயகத்தைப்
பாட்டுடைத் தலைவராகக் கொண்டு காப்பியங்களை இயற்றியவர்கள் ஆவர்.
இருபதாம் நூற்றாண்டில் ஆலிம்கவிஞர் சிராஜ் பாகவி அவர்கள் அறுசீர் ஈரடிக்
கண்ணிகளால் அண்ணலாரின் வரலாற்றை “நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்ற
காப்பியமாகப் படைத்தார். அவரைத் தொடர்ந்து பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.
அப்துற்றஹீம் அவர்கள் நாயக காவியம் என்ற நூலை எழுதி முடித்தார். ஆயினும்
அந்நூல் இன்னும் முழுமையாக அச்சுரு பெறவில்லை. வார்த்தைச் சித்தர்
வலம்புரிஜான் இயற்றிய “நாயகம் எங்கள் தாயகம்” என்ற நூலும், கவிஞர்.
மு.மேத்தா எழுதிய “நாயகம் ஒரு காவியம்” என்ற நூலும் புதுக்கவிதை வடிவில்
பூமான் நபியைப் புகழ்ந்து பாடப்பட்ட காப்பியங்களாகும்.
இந்த நெடிய வரலாற்றில் இப்புதிய நூற்றாண்டில் அண்ணல் நபியின்
பெருமைகளுக்கு அணிசேர்க்க, என் அருமை நண்பர் துரை. மாலிறையன்
படைத்திருக்கும் காப்பியமே “இறைபேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம்”
என்னும் இந்நூல்.
பல்வேறு சிறப்புக்கள் இந்தக் காப்பியத்துக்கு உண்டு. அவற்றுள் சில.
-
நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு தமிழில்
வெளிவரும் ஒன்பதாவது காப்பியம் இந்நூல்.
-
முகம்மது நபியைப் புகழ்ந்து மரபுகவிதை நெறி மாறாமல்
பாடப்பட்டுள்ள ஏழாவது காப்பியம்.
-
இருபத்தோராம் நூற்றாண்டில் ஏந்தல் நபியைக் காப்பியத் தலைவராகக்
கொண்டு பாடப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம்.
-
இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவரால் பாடப்பட்ட மிகப் பெரும்
இஸ்லாமியத் தமிழிலக்கியம்.
மரபு கவிதையில் நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு
பாடப்பட்ட ஏழாவது காப்பியமாகிய இந்நூல், கவியரசர்
துரை. மாலிறையன்
படைக்கும் ஏழாவது காப்பியம் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.
காதற்கனிகள், நேரு காவியம், பாவேந்தர் காப்பியம், அம்பேத்கார்
காப்பியம், அருள்நிறை மரியம்மை காவியம், அன்னை தெரசா காவியம்,
ஆகியவற்றைத் தொடர்ந்து துரை. மாலிறையன் வழங்கும் ஏழாவது காப்பியமே
இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம் என்னும் இந்நூல்.
உமறுப்புலவர் காட்டிய வழியில், சமய நட்பால் இக்காவியம் செய்ததாக
அவையடக்கத்தில் கூறகின்ற ஆசிரியர்,
|