அவ் வேள்வியில் தோன்றிய முயலகனையும்,
வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ ஒரு
திருக் கையில் அமர்ந்தது. முனிவர்களும் நல்லறிவு பெற்று, சிவபெருமானை வணங்கினார்கள்.
29.
திருப்பாற்கடல் கடைந்தது: தேவர்களும் அசுரர்களும் மந்தரமலையை மத்தாகவும், வாசுகி
என்னும் பாம்பைத் தாம்பாகவும் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தார்கள், மந்தரமலை
நிலையாமல் இருந்தபடியால், திருமால் ஆமை உருக்கொண்டு, அதைத் தாங்கியும், ஒரு கையால்
அசையாமல் அழுத்தியும், நிலைபெறச் செய்தார். கடையும்போது தோன்றிய கொடிய விஷத்தைக்
கண்டு, தேவரெல்லாம் அஞ்சினார்கள். சிவபெருமான் அந்த விஷத்தை உண்டு, கண்டத்தில்
இருத்தி, நீலகண்டனாகித் தேவர்கள் எல்லாம் மடியாமல் காப்பாற்றினார். பின்னர்,
திருப்பாற்கடலிலிருந்து, திருமகள், இந்திராணி, சந்திரன், உச்சைச்சிரவம் என்னும்
குதிரை, ஐராவதம், கௌத்துவமணி, ஐந்தருக்கள், காமதேனு, தன்வந்திரி, வாருணி, தேவமாதர்,
அமுதகலசம், பிறந்தன. திருமகளையும் கௌத்துவமணியையும் திருமாலும், காமதேனுவை முனிவர்களும்,
வாருணியை அசுரரும், மற்றவற்றை இந்திரனும் எடுத்துக் கொண்டார்கள். திருமால் மாயத்தால்
அசுரர்களை ஏமாற்றி, தேவர்களுக்கே அமுதத்தைப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களை இறப்பில்லாத
அமரர்களாக்கினார்.
30.
திருமால் பாம்பின் வாயைக் கீண்டது: கண்ணன், கஞ்சன் ஏவலால், தன்னை விழுங்குவதற்காக
மலைப்பாம்பு வடிவத்துடன் பிருந்தாவனத்துக்கு வந்த பகாசுரன் தம்பியாகிய அகாசுரனை வாயைக்
கிழித்துக் கொன்றான்.
31.
திருமாலுக்கு ஆழி அருளியது: சலந்தரனைத் தடிந்த ஆழிப்படையைப் பெறுவதற்காக, திருமால்
சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கொண்டு வழிபட்டு வந்தார். ஒரு நாள் ஒரு மலர் குறையவே,
குறைந்த மலருக்குத் தம் கண்ணையே ஈடு செய்து இடந்து சாத்தினார்; அவருடைய வழிபாட்டின்
சிறப்பைக் கண்டு, சிவபெருமான் ஆழிப்படையை அருளினார்.
32.
தூணம் ஈன்ற குழவி: இரணியன் என்னும் ஓர் அரக்கன், 'திருமாலின் பெயர்கூடத் தன்
ஆட்சியில் வழங்கக் கூடாது' என்று கட்டளையிட்டான். ஆனால், அவன் மகனாகிய பிரகலாதன்
திருமாலுக்கு வழிபாடு செய்பவனாகவும், அவர் பெயரையே இடைவிடாது கூறுபவனாகவும், தோன்றினான்.
அதற்காகத் தன் மகனை இரணியன் பலவாறு துன்புறுத்திக் கொல்ல முயன்றான்; முடிவாக, 'நீ
வணங்கும் திருமால் யாண்டையன்?' என வினவினான். மைந்தன் 'யாண்டும் உளன்' எனக்
கூற, தந்தை வெகுண்டு, 'முன் நின்ற தூணத்திலும் உளனோ?' எனக் கூறி, தூணைத் தன் கையால்
அடிக்க, திருமால் அங்கிருந்து நரசிங்க உருவத்தில் வெளித்தோன்றி, இரணியனைக் கிழித்துக்
கொன்றார்.
33.
நக்கீரன் பனுவல் கேட்டது: சிவபெருமான் நெற்றிக் கண்ணின் வெப்பத்தைத் தாங்கவியலாது,
நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் விழுந்து, தான் சிவபெருமானிடம் மாறுகொண்டு வாதாடியது
தவறு என உணர்ந்து, சிவபெருமான்மீது பாடிய செய்யுட்களை, மற்றச் சங்கப் புலவர்களால்
அறிந்து, சிவபெருமான் பொற்றாமரைக் குளத்தில் நக்கீரனுக்குக் காட்சி கொடுத்து,
அவன் பாடிய திருமுறைச் செய்யுட்களையும் கேட்டு, தம் திருக்கைகளால், கீரனைக் கரையேற்றி
அருள் செய்தார்.
34.
நரி பரியாக்கியது: சிவபெருமான் நரியைப் பரியாக்க வல்லவர் என்பதும், அவ்வாறே
செய்கின்றார் என்பதும், இறைவனுடைய செயற்கருஞ் செயலை மக்களுக்குத் தெரிவிக்கும்
கருத்துடன் வேதகாலம் முதல் நம் நாட்டில் வழங்கி வருகின்றன. இங்கு, அச் செய்தி மாணிக்கவாசகருக்காகச்
சிவபெருமான் நரியைப் பரியாக்கினார் என்று உருவகச் சுவைபடக் கதையாக வழங்குவதாயிற்று.
35.
நால்வர்க்கு அருளியது: மெய்ப் பொருள் காண விரும்பிய சநகர், சநந்தனர், சநாதனர்,
சநற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கும், சிவபெருமான் தென்முகக் கடவுளாகக் கல்லால
நிழலில் அமர்ந்து, சரியை, கிரியை, யோகம், என்னும் முதல் மூன்று பகுதிகளையும் உபதேசம்
செய்து, நான்காவதாகிய ஞானத்தை, இருந்தபடி இருந்து, மோனமுத்திரையினால் அருளிச் செய்தார்.
36.
பகீரதன்: கபில முனிவரின் சாபத்தால் நீறாகிக் கிடந்த சகரர்கள் நற்கதிபெற
வேண்டி, வானுலகத்திலிருந்து கங்கையைத் தன்னுடைய சொல்லுதற்கரிய தவ முயற்சியால்,
நிலவுலகிற்குக் கொண்டு வந்து, மடிந்தார் சாம்பரைத் தூய்மை ஆக்கி, அவர்கள் வீடுபெறுமாறு
செய்தவன். இவன் சகரர் மரபில் தோன்றியவன்.
37.
பசுக்காவலர்: அருக சமயத்தைச் சார்ந்தவரான கருநடரின் எழுச்சியால் மதுரை முற்றுகை
செய்யப் பெற்றது; அதனால் இறைவன் வழிபாடுகள் தடையுற்றன; அக் காலத்தில் தாம் வழக்கமாகச்
செய்து வந்த சந்தனக் காப்புப் பணியைத் தம் முழங்கையையே சந்தனக் கட்டையாக வைத்து,
அரைத்துத் தம் தொண்டினைச் செய்து வந்தார். ஆருகதர் ஆதிக்கம் ஒழிந்தபின், ஆலவாய்
அண்ணல் அருளால், மணிமுடி கொள்ளாது சடைமுடி கொண்டு, மணிக்கலன் அணியாது உருத்திராக்கம்
அணிந்து, நறுங்கலவை பூசாது திருநீறு அணிந்து, பாண்டி நாட்டை ஆண்டு வந்தார்; இவரே அறுபத்து
மூன்று நாயன்மார்களில் ஒருவராய 'மும்மையால் உலகாண்ட மூர்த்தி' என்னும் பெரியார்.
38.
பதஞ்சலி: மதுரையில் இறைவனது திருமணம் காணச் சென்ற பதஞ்சலி முனிவர், இறைவனது
தில்லையம்பலத் திருக்கூத்தைக் கண்டு வணங்கியே உண்ணும் நியமம் உடையவராகையால்,
திருமண விருந்தில் உண்ணாது விடைபெற்றார். சிவபெருமான் அவருக்காக வேண்டித் தில்லையில்
ஆடும் திருக்கூத்தை வெள்ளியம்பலத்தில் ஆடித் திருவருள் செய்தார். இறைவன் திருநடக்
காட்சியில் என்றும் திளைத்து இன்புறும் இயல்பினராய வியாக்கிரபாதர் என்னும் முனிவரையும்
இவருடன் இணைத்துப் பதஞ்சலி வியாக்கிரபாதர் என்று வழங்குவது மரபு.
39.
பன்றிக் குட்டியைப் படைத் தலைவராக்கியது: தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவனிடம்
குறும்பு செய்த பன்னிரண்டு இளைஞர்கள் அம் முனிவனது சுடுமொழியால், காட்டில் பன்றிக்
குட்டிகளாகப் பிறந்தார்கள். தாய்ப்பன்றி அம்பு பட்டு இறந்தது. இந்தக் குட்டிகள்
தவித்தன. சிவபெருமான் அவைகளுக்கு இரங்கி, தாம் பன்றி உருவில் வந்து, பால் கொடுத்துக்
காப்பாற்றினார். இறைவன் திருவருளுக்கு இலக்காகிய இந்த ஏனக் குருளைகள் நல்லுணர்வும்,
தொல்லறிவும் வரப்பெற்று, பிற்காலத்தில், பாண்டியன் படைத் தலைவராயின.
40.
பன்றியும் பறவையும்: ஒரு காலத்தில் நான்முகன் தானே பெரியவன் என்று செருக்கடைந்து,
திருமாலிடம் கூற, திருமால் தானே பெரியவன் என்று கூற, இருவர்க்கும் போர் நிகழ்ந்தது.
அப்பொழுது ஒளிவடிவமான பெரிய தோற்றம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது. இருவரும் தம்
போரை நிறுத்திக்கொண்டு தம் முன் தோன்றிய ஒளிப்பிழம்பு இன்னதென ஆராய வேண்டி,
திருமால் பன்றி உருவங்கொண்டு அடியின் முடிவாய எல்லை நோக்கியும், நான்முகன் அன்னத்தின்
உருக்கொண்டு முடிநோக்கியும், புறப்பட்டார்கள். பல ஊழிகள் முயன்றும் காண முடியாதவர்களாய்க்
களைத்து, முன் நின்ற தோற்றம் சிவபெருமானே என்பதை உணர்ந்து, திருஐந்தெழுத்தை முறையாகப்
பல காலம் ஓதினர். இறைவன் அந்த அனற்பிழம்பினின்றும் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்து
மறைந்தான்.
41.
பாண்டவர் தூது: பாண்டவர்கள், துரியோதனனால் மதிக்கப் பெற்ற சகுனியின் சூழ்ச்சியால்
சூதாடி, வளப்பமுள்ள தங்கள் குருநாட்டைத் தோற்று, காட்டில் தங்கியிருந்து, பின்னர்,
அதனைப் பெற வேண்டிக் கண்ணனைத் துரியோதனன் பால் தூது விடுத்தனர். அதனால், திருமாலுடைய
அவதாரமாகிய கண்ணனுக்குப் 'பாண்டவர் தூதன்' என்ற பெயராயிற்று.
42.
பாண்டியன் மேகங்களைச் சிறையிலிட்டது: இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்ட
பகைமையினால், மேகங்கட்குத் தலைவனான இந்திரன் அவை பாண்டிய நாட்டில் மழை பொழியாவண்ணம்
கட்டளையிட்டான். சேர, சோழ நாடுகள் மழை பெய்து செழிப்புற்றோங்க, பாண்டியநாடு
மழையின்றி வற்கடம் (பஞ்சம்) மிகுவதாயிற்று. ஒரு நாள் பாண்டியன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது
பொதிய மலையில், புட்கலாவர்த்தம், சங்கரித்தம், துரோணம், காளமுகி, ஆகிய மேகங்கள்
நான்கையும் விலங்கிட்டு, மதுரைக்குக் கொண்டு வந்து சிறை செய்தான்.
43.
புலி முலை புல்வாய்க்கு அருளியது: ஒரு கடப்பங் காட்டில் தனித்து வாழ்ந்து வந்த
பெண்மான் ஒன்று தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்து, நீர் பருகும் போது, வேடன்
அம்பால் மாண்டது. தாயை இழந்த மான்கன்றுக்குச் சிவபெருமான் அருளால் அங்கிருந்த ஒரு
பெண்புலி பால் கொடுத்து வளர்த்தது.
44.
பொற்கைப் பாண்டியன்: பாண்டிய மன்னன் ஒருவன் ஓரிரவு நகர் சோதனை செய்யும்பொழுது,
ஓர் அந்தணப் பெண் தனியாக வாழும் இல்லில் ஆண் பிள்ளைக் குரல் கேட்பதறிந்து, ஐயுற்றுக்
கதவைத் தட்டினான். கங்கைக்கு நீராடச் சென்றிருந்த அந்தணன், அப்பொழுதுதான் திரும்பி
வந்து மனைவியோடு பேசிக் கொண்டிருந்தான். தட்டியது கேட்டு அந்தணன் ஐயுற, இவ்வாறு
அந்தணனுக்கு ஐயுறவு நேர்ந்தது தன் அறியாமையே என்று, அக் குறைக்கு முறை செய்ய வேண்டி,
கதவு தட்டிய தன் கையைத் தானே வெட்டி எறிந்தான். வெட்டுப்பட்ட அவனது கைக்கு மாறாக,
அந்த இடத்தில், இறைவன் அருளால், பொன்னிறக் கையொன்று மீண்டும் வளர்ந்து தோன்றி,
அவனது செங்கோலின் சிறப்பை வெளிப்படுத்தி நின்றது. அதுமுதலாக உலகம் அவனைப் பொற்கைப்
பாண்டியன் எனப் புகழலாயிற்று.
45.
மண் சுமந்தது: வையை நதியில் வெள்ளம் பெருகி, மதுரையை அடுத்து வந்தது. அரசன்
ஆணையால் குடிமக்கள் எல்லாரும் கரையைப் பங்கிட்டு, அணையிட்டார்கள், வந்தி என்னும்
கிழவிக்கு ஆள் இல்லாமையால், அவள் கூலிக்கு ஆள் தேடினாள். அப்பொழுது அவள் விற்கும்
பிட்டையே கூலியாக ஏற்றுக் கொண்டு, கரையிடுவதாக ஒரு கூலி ஆள் கிடைத்தான்; ஆனால்
மற்றையார் பங்கெல்லாம் அடைபடவும், வந்தியின் பங்கு மட்டும் அடைபடாதிருந்தது. அவள்
அனுப்பிய ஆள் ஆடுவதும் பாடுவதும் பிட்டு உண்பதும் ஆக இருக்கின்றானே அல்லாமல், வேலை
செய்யவில்லை என்பதைக் கேட்ட பாண்டிய மன்னன், அந்தக் கூலி ஆளை வெகுண்டு, முதுகில்
அடித்தான். அந்த அடி எல்லா உலகிலும் எல்லார் மேலும் பட்டது; வெள்ளமும் வடிந்தது;
கூலிஆளும் மறைந்தான். இது இறைவன் திருவிளையாடல் என்பதை யாவரும் உணர்ந்தனர்.
46.
மத்தியந்தணன்: வியாக்கிரபாத முனிவரின் தந்தை. இவருடைய கட்டளையால் தில்லையில்
வந்து தவம் புரிந்து, வியாக்கிரபாதர் நற்பேறு பெற்றார். இவரது வரலாற்றைக் கோயிற்புராணத்தில்
வியாக்கிரபாதச் சருக்கத்திலே விரிவாகக் காணலாம்.
47. மதுரை ஆலவாய் ஆனமை:
பிரளயத்தின் பின்னர் மதுரை மாநகரை நிர்மாணிக்கக் கருதிய பாண்டியன் ஒருவன், புது
நகரின் எல்லையை அளவிட்டுக் காட்டவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டான்.
இறைவன் ஒரு சித்தரது வடிவில் தோன்றி, தான் அணிந்திருந்த பாம்புகளில்
|