உபதேசித்தவர்; பிரமனைக் குட்டிச்
சிறையிலிட்டு, பின் தேவர்கள் வேண்ட விடுதலை செய்தவர்; நேரிமலையைத் தணித்தவர்;
அகத்தியருக்குத் தமிழ் அறிவுறுத்தியவர்; உமாதேவியாரிடமிருந்து வேற்படையைப் பெற்றவர்;
தேவர்களுக்கு இடுக்கண் செய்த சூரபதுமனை வென்று, தலைகீழ் நிற்கும் ஒரு மாமரமாக அவன்
உருவெடுத்துக் கடலில் மறைந்தபோது, கடல்வற்ற வேல் விடுத்து, மாமரத்தை இரு துண்டமாக
வெட்டிச் சாய்க்க, ஒரு துண்டு மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் வந்து போர் செய்ய,
அவற்றை அடக்கி, முறையே வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவர்; இந்திரன் மகளாகிய தேவ
யானையையும், குறிஞ்சி நிலமகளாகிய வள்ளியம்மையாரையும் மணந்து, அடியவர் வேண்டும் இடங்களில்
அமர்ந்து அருள் செய்பவர்; தென் நாடும், தமிழ் மொழியும் ஏற்றமடைய வேண்டி, பாண்டியர்
குடியிலும் மதுரை மணிவணிகர் குடியிலும் தோன்றி, நாடாண்டும் தமிழாய்ந்தும், அருள் செய்தவர்.
56.
யானைமுகக் கடவுள்: சிவபெருமானின் மூத்த பிள்ளையார்; களிறும் பிடியுமாக எழுதியிருந்த
ஓவியத்தில் இறைவன், இறைவியுடைய திருக்கண் பட, அங்கிருந்து யானை முகத்துடன் தோன்றியவர்;
தேவர்களுக்கு இன்னல் விளைத்து வந்த யானைமுக அசுரனைத் தம் கொம்பால் எறிந்து கொன்று,
தம் பெருமூச்சினால் அவனுடைய படையையும் கிளையையும் வேரறுத்து, வானவர்கள் துன்பத்தைத்
தீர்த்தவர்; சிவபெருமான் தன் இரு பிள்ளைகளுள் உலகத்தை வலம் செய்து முதலில் வருபவருக்கு
ஒரு மாங்கனி அளிப்பதாக கூற, இறைவனல்லாது ஞாலமில்லையாகையால் இறைவனே உலகம் என்று
கண்டு, இறைவன் இறைவி திருவுருவங்களை வலம் வந்து வணங்கி, மாங்கனியைப் பெற்றவர்;
இந்திரன் வேண்ட, அகத்தியரது கமண்டலத்திலிருந்த நீரைக் காகமாகச் சென்று கவிழ்த்து,
காவிரியாகப் பெருகச் செய்தவர். தம்மை வழிபடும் அடியவர்களது துன்பத்தைப் போக்கி,
இன்பத்தைத் தந்து வாழ்விப்பவர்.
57.
வடுகக் கடவுள்: இவர்க்கு வைரவக் கடவுள் என்பது மற்றொரு பெயர். ஐந்து முகங்களோடு
இருந்த பிரமனது அகந்தையைச் சிவபெருமான் ஏவலால் அடக்கி, ஐந்தாவது தலையை நகத்தால்
கிள்ளி, பலியேற்கும் கலனாகக் கையில் ஏந்தி, தேவர்களுடைய குருதியைப் பலியாக ஏற்று,
அவர்கள் இறுமாப்பையும் அடக்கித் தூய்மைப்படுத்தியவர்; வைரவ புவனத்துக்கு அதிபராக
இருந்து மக்களுக்குத் துன்பத்தைப் போக்கி இன்பந் தருபவர். நீல நிறமுடையவர்; சிவபெருமானுக்கு
உள்ள அடையாளங்களும் படைக்கலங்களும் பெரும்பாலும் இவர்க்கும் உண்டு. வேதங்கள் நாய்
உருக்கொண்டு வாகனமாக இவர்க்கு அமைந்தன. பிள்ளை என்றும், மகன் என்றும் இவரைக்
கூறுவதுண்டு.
58.
வந்தியாளாக வந்தது: 45 ஆவது கதை பார்க்க.
59.
வலை வீசியது: சிவபெருமானது சுடு மொழியால், உமைஅம்மையார், பாண்டி நாட்டில் ஒரு
வலைஞன் மகளாகவும், தென் கடலில் நந்திதேவர் ஒரு சுறா மீனாகவும் பிறந்தனர். வலைஞர்
குலத்து இளைஞன் உருவில் சிவபெருமான் எழுந்தருளி, சுறாமீனாகத் திரிந்த நந்திதேவரைப்
பிடித்தும், அவர் சுமந்திருந்த ஆகமங்களை வாங்கியும், வலைஞர் மகளாக வளர்ந்த உமையம்மையாரை
மணந்தும், திருவருள் செய்தார்.
60.
வழுதியாகி முழுதுலகு அளித்தது: சிவபெருமான் தடாதகைப் பிராட்டியாரை மணந்து, பாண்டி
நாட்டில் அரசு செலுத்தியதால், 'வழுதியாகி முழுதுலகளித்தது' என வழங்கப் பெறுகிறது. இவர்
வழுதி ஆகி ஆட்சி செய்யும்பொழுது மக்களுக்கும் அரசர்களுக்கும் தெய்வ வழிபாட்டின் இன்றியமையாமையைத்
தெளிவுறுத்த வேண்டித் தம் நகரமாகிய மதுரை மாநகரின் நடுவூரில் ஒரு திருக்கோயில் அமைத்துத்
தெய்வ வழிபாடு செய்து வந்தார்.
61.
வள்ளுவமாலையின் முதற்கவி பாடியது: திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் அரிய
நூலை மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் முதலில் புறக்கணித்து, பின்னர், தெய்வநிகழ்ச்சி
ஒன்றால் அதன் பெருமையை உணர்ந்து பாராட்டினர் என்றும், அவ்வாறு பாராட்டும் பொழுது
சிவபெருமானே புலவராக எழுந்தருளி முதற்கவி பாடினார் என்றும், அதுவே திருவள்ளுவமாலையின்
முதற் செய்யுளாக அமைந்துளது என்றும் கூறுகிற செவி வழக்கான செய்தியைக் கொண்டு எழுந்தது
இக் கதை.
62.
வளையல் விற்றது: தாருகாவன முனிவர்களுடைய பெண்டிர் பழவினையால் மதுரையில் வணிகர்
புதல்வியர்களாகப் பிறந்தார்கள். அவர்களை ஆட்கொள்வதற்காக, சிவபெருமான் வளையல்
விற்கும் வணிகனது கோலத்தில், மதுரைத் தெரு வீதிகளில் நடந்து, வளையல் விற்றார்.
63.
வாள் எடுத்தது: வாள் வீச்சில் வல்லவனான சித்தன் என்பான், தன் ஆசிரியர்
மனைவிபால் தகாதது எண்ணித் தனித்துக் கூற, அவ்வம்மையார், மனம் நடுங்கி, ஆலவாய்
அண்ணலை நினைந்தார்; அப் பெருமான் ஆசிரியர் வடிவில் வந்து, அத் தீயோனைப் பலவாறு
வாளால் மலைந்து சிதைத்தார்.
64.
விறகு விற்றது: பாண்டியன் செய்த சிறப்பால் இறுமாப்புற்று, மதுரையில் தங்கியிருந்த
ஒரு வடபுலப் பாணனோடு, ஆலவாய் அண்ணலின் அடியவனான பாணன் ஒருவன் இசைவாது செய்ய நாள்
குறிப்பிட்டிருந்தபோது, வட புலப்பாணனின் தான் தாழ்ந்தவன் என எண்ணங் கொண்டிருந்த
தன் பக்தனாகிய மதுரைப் பாணனுக்கு ஆலவாய் அண்ணல் இரங்கி, இசைபயிலத் தகுதியற்றவன்
என மதுரைப் பாணனால் புறக்கணிக்கப்பட்டதால் விறகு விற்கும் தொழிலை மேற்கொண்டு
ஒரு முதியவன் போல் வடபுலப் பாணனின் இருப்பிடம் வந்து சாதாரிப் பண்ணைப் பாட, அதன்
இனிமை, உயர்வு இவற்றைக் கண்டு அஞ்சி, அந்த வடபுலப் பாணன் மதுரையை விட்டு அகன்றான்.
65.
வீரனை அருளியது: தக்கன் சிவபெருமானைப் புறக்கணித்து வேள்வி செய்ய முயன்றதற்காக
உமையம்மை உள்ளம் வருந்திச் சினங்கொண்டு, அவ் வேள்வியை அழிக்க எண்ணியபோது,
சிவபெருமானது நெற்றிக்கண்ணினின்றும் வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்வியை
அழித்தார்.
66.
வையை நதியை அழைத்தது: தடாதகைப் பிராட்டியார் திருமணவிழாவிற்குச் சிவபெருமானொடு
வந்த பூத கணங்களில் ஒருவனாகிய குண்டோதரன் மலை மலையாகக் குவிந்துள்ள சோற்றை ஒருங்கே
உண்டு, மிக்க நீர் வேட்கைகொண்டு, மதுரையில் உள்ள நீரெல்லாவற்றையும் பருகிப் போதாது
வருந்த, சிவபெருமான், அவன் நீர்வேட்கை தணியுமாறு ஒரு பேராற்றை மதுரைக்கு வரச் செய்தார்.
அங்ஙனம் வந்த ஆறே வையை எனப் பெயர்பெற்றது.
|