பதிப்புரை
 
உலகில்  தோன்றியிருக்கும்  உயிர்கட்கெல்லாம்  இன்பமே   நிலைக்களன்.
இன்பத்தில்   தலைசிறந்த   இன்பம்   காதல்   வாழ்வு.   இக் காதல்  கட்டற்ற
அன்பினின்றுங் கிளைத்தெழும் பெற்றியது.  இஃது ஆண்மை பெண்மை முகிழ்த்த
ஆடவர் பெண்டிரின் மனத்தில் ஊன்றிக் கிளைத்துத் தழைத்துப் பற்றிப்  படர்ந்து
திகழும் பான்மையது. இதனை விளக்குவனவே கோவை நூல்கள்.
கோவைகளின் மாண்பு  முழுதும் வற்றாத  களஞ்சியம், இத் தஞ்சைவாணன்
கோவை.   இதற்கு   நல்லுரை   வகுத்தமைத்து   ஈந்துதவியவர்     சொக்கப்ப
நாவலரென்னும் புலவர் பெருமானாராவர்.

இத்தகைய  நூலைச்  செவ்விய  அமைப்புடன்  செப்பஞ்செய்து  தமிழுலகு
கூட்டுண்டு  மகிழ  ஆசிரியர்  வரலாறு,   உரையாசிரியர்  வரலாறு,  முன்னுரை
முதலியவற்றுடன் வெளியிட்டுள்ளோம்.

இதனைத்  தமிழ்  கூறும்  நல்லுலகத்து  மக்கள்  யாவரும்  வாங்கிக் கற்று,
முத்தமிழ்த்  துறையின்  முறைபோகிய  வித்தகர்களாய்  எஞ்ஞான்றும்   விளங்கி,
இந்  நூற்  கருத்தையும்  சிறப்பியல்புகளையும்  நாடெல்லாம்  பரப்புவார்கள் என
நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.