தஞ்சைவாணன் கோவை
இச்செய்யுளைக்   கேட்டுக்கொண்டிருந்த   முருகவேடன்,   ‘இச் செய்யுளிற்
பொருள் குற்றமுளது.  அஃதாவது  கள்ளியே  பொரிந்து  தீயாகி  அதன் பொறி
பறக்குங் கானலில் வேல  முட்கள் வெந்தெரிந்து  போகாமல் கிடப்பதெங்ஙனம்?‘
என்று  நகைத்தார்.   ‘வேலமுள்  வெந்து  போகாது  கிடந்து  காலில்   தைக்க
இயலுமோ?  இவ்வாறு  குற்றமுள்ள பாடல் புலவர்  பாடுவரோ? யான் பாடுவேன்
கேட்டிடுக,‘ என்று பொய்யாமொழியார் மீது,

 

"விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்திற் பெய்வளையும் சென்றனளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்"
என்னும்  வெண்பாவைப்  பாடினார்.  அப்பால் ‘நீ முன் குஞ்சைப் பாடேனென்று
கூறிய  வாயால்  இப்போது  முட்டையைப்  பாடியது  வியப்புக் குரித்தே,‘ என்று
கூறினார்.  அப்போது புலவர்,  இவ்வுருவில்  வந்துள்ளோர்   முருகப்பெருமானே
எனத் துணிந்தனர்.  தம் பிழையைப்  பொறுத்தருளுமாறு  வேண்டி  வணங்கினர்.
முருகக்  கடவுள்  தம்  தெய்வத்  திருக்கோலங் காட்டிப் புலவர் நாவில் வேலால்
எழுதி மறைந்தனர்.

அப்பால் அவ்வழியைக் கடந்து பாண்டிநாடு போந்தனர். அதுகாலை ஆட்சி
செய்து   கொண்டிருந்த  வணங்காமுடிப்  பாண்டியனைக்   கோயிலில்   போய்க்
கண்டனர்.  கண்டு  ‘குழற்கால் அரவிந்தம்‘ என்னும் செய்யுளைப் பாடித் தம்மைத் தெரிவித்தனர். பாண்டியன் புலவரிடம் நன் மதிப்புக் காட்டாமல் இருந்து, ‘இங்குக்
கல்லுருவில்  இருக்கும்  சங்கப்புலவரைத்  தலையசைக்கவும் கைதட்டவும் செய்க,‘
என்றான். அதற்குப் புலவர் இசைந்தார்.


"உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ
திங்கட் குலன்அறியச் செப்புங்கள்-சங்கத்தீர்
பாடுகின்ற முத்தமிழக்கென் பைந்தமிழும் ஒக்குமோ
ஏடெழுதார் ஏழெழுவீர் இன்று."
எனப்  பாடி  அவ்வாறே  செய்வித்தனர்.  பின்னர்ப்  ‘பொற்றாமரைக்  குளத்தில்
அமிழ்ந்துகிடக்கின்ற சங்கப் பலகையை மிதக்கப் பாடுக‘ எனப் புலவர்,

  "பூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்
பாவேந்தர் உண்டென்னும் பான்மையால் கோவேந்தன்
மாறன் அறிய மதுரா புரித்தமிழோர்
வீறணையே சற்றே மித."

என  ஒரு  வெண்பாப்  பாடியவுடன்  அதுவும்  மிதப்பக்  கண்டான்  வேந்தன்.
அதற்கும் வியவாமல் இருந்ததுடன் புலவருக்கு  நன்மதிப்புங்  கொடுத்தானில்லை.
அதுகண்டு புலவர் சினங்கொண்டு மீண்டனர்.