நூலாசிரியர் வரலாறு

 

 

செங்காட்டங் கோட்டத் துறையூர் எனுந்தலத்தில்
தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்‘
என்னும் வெண்பாப் பாடி அவரை வாழ்த்தி நின்றார்.

அன்று  முதல்  ஆசிரியர்  இட்ட  காரணப்  பெயரான,  ‘பொய்யாமொழி‘
என்பதே  பெயராக  வழங்கிற்று. இவரது இயற்பெயர்  மறைவதாயிற்று. பின்னரும்
காளியின் அருளினால் செய்யுள்  பாடும் திறனில் மிக்கோங்கி விளங்கினர்.  இவர்
காளியையே பாடும் கடப்பாடுடையரானார்.

இவர்பால்  ஒருநாள் முருகக் கடவுள் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது
ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர்,

‘கோழியையும்  பாடிக்  குஞ்சையும்  பாடுவேனோ‘    என்று    மறுத்துரைத்தார்.
வேற்றுருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார்.

பின்பு பொய்யாமொழிப்  புலவர்  மதுரைக்குச் சென்று வர எண்ணினார்; அங்கே
பழைய தமிழ்ச் சங்கத்தை  மீண்டும் நிறுவி நடத்த நினைத்தார்; மதுரை நோக்கிப்
புறப்பட்டார்; வழியில்     திருச்சிராப்பள்ளியில்       தங்கினார்.      ஆங்கு
எழுந்தருளியிருக்கும்  தாயுமானவரைப் போற்றினார்; அவர்மீது கலித்துறை ஒன்று
பாடிப் பணிந்தார். அப்பால் அங்கிருந்து தன்னந்தனியராக ஒரு காட்டின் வழியே மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. வெம்பரற் கற்களும் வேல
முட்களும் படர்ந்த வெவ்விய அனல்  கொளுத்தும் காடு.  அதன் வழியாக வழிக்
கொண்டு சென்று  கொண்டிருந்தார்.  முருகக் கடவுள்  அங்கே ஒரு  வேட்டுவச்
சிறுவன் போல்   உருவங்கொண்டு  இவர் முன் தோன்றினார்.  ‘இவ்வழியாக இக்
காட்டில் நீ செல்வது கூடாது,‘ எனக் கூறினார். பொய்யாமொழியார்,  ‘நாம் இன்று
ஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்‘  என்று  கருதி  அஞ்சி  நின்றார்.
அப்போது முருக வேடன் ‘நீ யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன் ‘உனக்குப் பாடத் தெரியுமோ?‘  என்று  வினவினார்   முருகவேள்.   ‘தெரியும்‘  என்றார்  புலவர்
பெருமனார். முருகவேடன்,  ‘என்மீது கரம்போக்காக  ஒரு  பாடல் பாடுக‘ என்று கூறினார். உடனே புலவர்  ‘உன் பெயர் யா‘தெனக் கேட்டனர்.  அப்போது முன்,
‘குஞ்சையும் பாடுவேனோ‘ என்று மொழிந்ததை நினைவாகக் கொண்டு முருகவேள், ‘என் பெயர் முட்டை‘ என்றார். அப்போது புலவர்,

  "பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்
கானவேல் முட்டைக்குங் காடு"
என்னும் வெண்பாவைப் பாடினர்.