அவை அடக்கம் |
ஆசிரிய
விருத்தம்
|
மாரிக்கு
நிகர்என்று பனிசொரிதல் போலவும்,
மனைக்குநிகர் என்றுசிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும், சந்த்ரன்முன்
மருவுமின் மினிபோலவும்,
பாருக்குள்
நல்லோர் முனேபித்தர் பலமொழி
பகர்ந்திடுஞ்
செயல்போலவும்,
பச்சைமயில்
ஆடுதற் கிணையென்று வான்கோழி
பாரிலாடுதல்
போலவும்,
பூரிக்கும்
இனியகா வேரிக்கு நிகர்என்று
போதுவாய்க்
கால்போலவும்,
புகல்சிப்பி
முத்துக்கு நிகராப் பளிங்கைப்
பொருந்தவைத்
ததுபோலவும்,
வாரிக்கு
முன்வாவி பெருகல்போ லவுமின்சொல்
வாணர்முன்
உகந்துபுல்லை
வாலகும
ரேசர்மேற்சதகம் புகன்றனன்
மனம்பொறுத்
தருள்புரிகவே.
|
(இ-ள்.)
மாரிக்கு நிகரென்று பனிசொரிதல் போலவும்
- மழைக்குச்
சமமாகப் பனிபெய்தல் போலவும், மனைக்கு நிகர் என்று சிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும் - வீட்டுக்கு ஒப்பாகும்படி ஒரு சிறுமி
மணலாலே வீடு கட்டுவது போலவும், சந்த்ரன் முன் மருவும் மின்மினி
போலவும் - திங்களுக்குச் சமமாகப் பொருந்தும்(படி) மின் மினி
(ஒளிவிடுதல்) போலவும், பாருக்குள் நல்லோர் முனேபித்தர் பல மொழி
பகர்ந்திடும் செயல் போலவும் - உலகில் நல்லவர்கன் பேசுவதைப்
போலப் பித்தர்கள் பலசொற்கள் பிதற்றுவது போலவும், பாரில் பச்சை
மயில் ஆடுதற்கு இணையென்று வான்கோழி ஆடுதல் போலவும் -
உலகத்தில் அழகிய பசுமையான மயில் ஆடுவதற்கு ஒப்பாக வான்கோழி
ஆடுவது போலவும், பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகரென்று போது
வாய்க்கால் போலவும் - பெருகிச் செல்லும் அழகிய காவேரி யாற்றுக்குச்
சமமாகச் செல்லும் சிறுவாய்க்கால் போலவும், புகல்சிப்பி முத்துக்கு
நிகராப் பளிங்கைப் பொருந்த வைத்தது போலவும் - புகழ்ந்து
சொல்லப்படும் சிப்பியின் முத்துக்குச் சரியாகப் பளிங்கைப் பொருத்துவது
போலவும், வாரிக்குமுன் வாவி பெருகல் போலவும் - கடலுக்கு நிகராகப்
பொய்கை நிறைந்து காட்டுதல் போலவும், இன்சொல் வாணர்முன் -
இனிய மொழிகளுடைய கவிஞருக்குச் சமமாக (எண்ணி), புல்லை வால
குமரேசர் மேல் உகந்து சதகம் புகன்றனன் - திருப்புல்வயலில்
எழுந்தருளிய குமரக் கடவுளைத் தலைவராக வைத்து விருப்பத்துடன்
சதகம் என்னும் நூலை எழுதினேன்; மனம் பொறுத்து அருள் புரிக -
(கவிவாணர்கள்) முழுமனத்துடன் பொறுத்துக்கொண்டு (இச்சதகத்தை)
ஏற்று அருள்வாராக. |
(கருத்து)
‘என் சொற்கள் புலவர் சொற்களைப் போல
இனிமையாக இல்லாவிடினும் பொறுத்து, இந்த நூலை ஏற்றுக் கொள்க'
என்பதாம். |
(அருஞ்சொற்கள்)
மாரி - மழை. மருவுதல் - பொருந்துதல்.
பார் - உலகம், நிகர் ஆ - சமம் ஆக. வாரி - கடல். வாவி - குளம்.
வாழ்நர் என்பது வாணர் என ஆயிற்று. உகப்பு - விருப்பம்.
சிப்பியிலிருந்து முத்துப் பிறக்கும். |
(வடசொற்கள்)
சந்திரன் - திங்கள். பித்தர் - அறிவு மயங்கியவர்.
|
|