vii
என்னும் கொங்கு மண்டல சதகப்பாடல் கம்பரோடு தொடர்புடைய செய்தியைக் காட்டும் (25). கம்பரின் பல்லக்கினைச் சுமந்தவன் மசக்காளி வேலன் (195) என்று வாலசுந்தரக் கவிராயரின் பாடல் கூறும். கொங்குநாட்டில் வெண்டுவ குலத்திற் பிறந்த தீத்தான் என்பவன் கம்பர் குளித்தலையில் குலோத்துங்க சோழன் முன்னிலையில் காவிரி, கொங்குநாட்டு வேளாளர் வீட்டு விருந்தினர்கள் கைகழுவும் எச்சில் நீர் என்று பாடித் தம்புகழை உயர்த்தியது காரணமாகக் கம்பருக்குத் தண்டிகை தாங்கியும் காளாஞ்சி ஏந்தியும் சம்மாளி தூக்கியும் அடிமைப்பட்டும் மிகுந்த புகழையடைந்தான் என்றும் கூறும். (194). இச்செய்தியை வலியுறுத்துமாறு மேழிவிளக்கம், திருக்கை வழக்கம் ஆகிய நூல்கள் கூறுவதும் எண்ணுதற்குரியன. இங்ஙனம் கம்பரோடு தொடர்புடைய கலியாணவரி போன்ற பல செய்திகள் இந்நூல்களில் காணப்பெறுகின்றமை மேலும் ஆய்தற்குரியனவாய் விளங்குகின்றன. கொங்கு நாட்டோடு கம்பர் பெரிதும் தொடர்புற்று வாழ்ந்திருக்க வேண்டும் என்பது மட்டும் இச்செய்திகளால் உறுதியாகின்றது.

மருத்துவச் செய்தி

உரையாசிரியரும் பதிப்பாசிரியருமான தி. அ. முத்துசாமிக் கோனார் அவர்கள் தம்முடைய பதிப்பில் பல அரிய செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளமை பெரிதும் குறிப்பிடத் தக்கதாகும். அறுவைச் சிகிச்சையில் தேர்ந்த மருத்துவப் பெண்டிர் அக்காலத்தில் விளங்கியிருந்தமையைக் கொங்கு மண்டல சதகப்பாடல் ஒன்று கூறுகிறது. வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுக்கும் இம்முறையை அக்காலத்திலேயே பின்பற்றியுள்ளனர். நறையூர் நாட்டினளான ஒரு மருத்துவச்சி இம்முறையில் சிகிச்சை செய்வதில் மிகத்தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தாள் எனத் தெரியவருகின்றது. (125) இதுகுறித்து உரையாசிரியர் மேலும் விவரங்கள் சேகரித்து இக்காலத்து மருத்துவநெறிமுறைகளோடு ஒப்பிட்டு ஆராய்வது எண்ணி மகிழத்தக்கது ஆகும். கரிகாலர் சோழன் மகளுக்கு வந்த வலிப்பு நோயை ஒருகுலாலன் மட்பாவை செய்து குறிபார்த்துச்சுட அவ்வலிப்புநோய் நீங்கியது எனப் பிறிதொரு பாடல் கூறும் (123).

 'கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு
மெரியா முடலை மயக்கமட் கோனிறைமகளைப்
பரிபா லனஞ்செய மட்பாவை யிற்குறி பார்த்துச்சுட'

அந்நோய் நீங்கியது என்பதால் அக்காலத்திய மருத்துவ நெறியும் புலனாகும்.