vi

சர்க்கரை என்னும் இத்தலைவன், புலவர் தம்மைச் சவுக்கால் அடித்தபோதும் தமிழுக்காகப் பொறுத்துக் கொண்ட தகைமையாளன் என்பதை அறிய முடிகின்றது. இதுகுறித்து நல்லதம்பிச் சர்க்கரைக் காதல் என்னும் சிற்றிலக்கியம்,

கற்றாய்ந்த நாவலர்தன் கையிற் சவுக்கடியும்
பெற்றான் சயத்தம்பம் பேருலகில் நாட்டுவித்தோன்

என்று கூறும், சவுக்கடி பெற்ற சர்க்கரை என்பவனோ இருபுறமும்
கூர்மையாயுள்ள சொட்டை என்னும் ஆயுதத்தைக் கையாள்வதில்
பெருவீரனாம். அத்தகைய பெருவீரனும் தமிழுக்காகப் பொறுத்துக்
கொள்ளும் பேராண்மையை இங்குக் காண்கிறோம். அவ்வாறே சம்பந்தச்
சர்க்கரை சிறையில் இருந்தபோது தன்னைக் கண்டு பாடிய புலவனுக்குத்
தன் மனையாட்டி அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தந்த
பெருவள்ளலாகத் திகழ்ந்தான் என்பதையும் காணலாம் (89). ஆணூர்க்
காமிண்டனை ஒருபுலவன் விற்க விலை கூறிய செய்தியையும் இந்நூலால் (91)
அறியலாம்.

மற்றோர் புலவன் மடிமேற்கை போட்டிழுத்து
விற்றா லல்லாதென் வெறுமைநோய் தீராதே
எங்கு விலைகூற வேயிசைந்த புண்ணியவான்
எங்குங் கனகாபி ஷேகமாகப் பொழிந்தோன்.

என்று நல்லதம்பிச் சர்க்கரைக் காதல் என்னும் பிரபந்தம் இவன் புகழ்பாடும்.

கம்பரும் சதகப்பாடல்களும்

கம்பனுக்கும் கொங்குநாட்டிற்கும் இருந்த தொடர்பு குறித்துப் பல
சுவையான செய்திகள் இந்நூல்களுள் காணப்பெறுகின்றன. குலோத்துங்க
சோழன் காலத்தில் காவிரி பெருக்கெடுத்து ஊர்களை அழித்தபோது கம்பரின்
சொல்லுக்குக் காவிரி கட்டுப்பட்ட கதையினைக் காண்கிறோம்.

கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச்செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே.