v

கொங்கு நாடும் தமிழும்

கொங்குப் புலவர் சபை ஒன்று அக்காலத்தில் இருந்தமையை (பக். 30)
இத்தொகுதியால் அறிய முடிகின்றது. 'பழந்தமிழ் ஐவாணர்' என்று கார்மேகக்
கவிஞரின் பாடல் (31) ஒன்று கூறும். ஐவாணர்கள் யார்யார் என்பதனை
உரையாசிரியர் பின்வருமாறு விளக்குவர்.

பட்டன் - தலைவனது புகழை எதிர்நின்று பாராட்டுவார்
புலவன் - இயற்றமிழால் இருந்து புகழ்வோன்
பண்பாடி - இசைத்தமிழ் பாடுவோன்
தக்கை கொட்டி - தக்கையென்னும் ஒருவகை வாத்தியம் வாசிப்போன்
கூத்தாடி - நாடகத் தமிழ் நடத்துவோன்

வில்லிபாரதத்தைத் தமிழில் பாடும்படி செய்வித்த ஆட்கொண்டான்
என்பவனும் கொங்கு மரபினன் என்று சதகநூல் கூறுகின்றது. அதற்குச்
சான்றாக வில்லிபுத்தூராரின் மகனார் வரந்தருவார் பாடிய பாயிரத்தைக்
காட்டுவார். 'இனிமை தருந் தமிழ்மாது களிப்புறுமாறு 'கொங்கு கோசர்கள்
ஆண்டனர் எனத் தமிழைப் புரந்த மன்னர்களைப் பாராட்டும் (44).
ஒளவையாருக்குப் பொன்னிலை பரப்பி அன்னமிட்டு விருந்துபசரித்தான்
கொங்கு நாட்டைச் சார்ந்த அசதி என்பான் (50) என்று பிறிதொரு பாடல்
கூறும். 'கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல் துங்கப் புலமைப்
பவணந்தி' கொங்கு மண்டலத்தைச் சார்ந்த சனகாபுரம் என்னும் ஊரினர்
(54) என்பர். 'பண்பார் சிவப்பிரகாசரைப்' போற்றியது கொங்கு மண்டலமாகும்
(57). ஆணூர்ச் சர்க்கரை புலவர்களைப் போற்றிப்புரந்த செயல்
வியப்பிற்குரியதாகும். புலவர்கள் அவனைப் பற்றிப் பாடிய அழகிய பாடல்
வருமாறு:

செங்குன்றை யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்
கெங்கெங்குந் தேடியிணை காணேங் - கொங்கதனிற்
சர்க்கரையைப் பாடலாம் தண்டமிழ்க்கொன் றீயாத
எக்கரையாம் பாடோ மினி.

புலவருக்காகக் காய்ச்சிய நெய்யில் கையிட்டுச் சத்தியம் செய்தவன்
ஆணூர்ச்சக்கரையாவன் (63). இங்ஙனம் புலவர்களுக்காகத் தம்மையே தரும்
பண்புடையவர்களாகத் திகழ்ந்த குமணனின் வழித்தோன்றல்களாக விளங்கிய
தலைவர் பலர் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்.