விநாயகன்
துணை
நூலாசிரியர்
வரலாறு
மலரவன்
வாழ்க்கை முகத்த தெனினும்
மலரவனும் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு
மற்றவர் செய்யு முடம்பு. |
கொங்கு
மண்டலத்திலே குறுப்புநாட்டிலே விஜயமங்கலம்
என்னும் ஊரிலே ஸ்ரீவத்ஸ கோத்திரம், ஒளபாக்ய சூத்திரம்
விருத்தானிய யோகசாகை காசிபப்பிரவரமான ஜைனப் பிராமண
குலத்திலேபதுமநாப அய்யர் என்பார் ஒருவர் இருந்தார். அவர்
அவ்வூரில் எழுந்தருளியுள்ள (ஜைன) ஸ்ரீசந்திரப்பிரப தீர்த்தங்கரர்
ஆலயபூஜை செய்துவரும் பரம்பரையினர். அவருக்கு அருமையாகப்
பிறந்த ஆண்குழந்தைக்கு ஜினேந்திரன்
எனப் பிள்ளைத் திருப்பெயரிட்டு
வளர்த்து வந்தனர். தந்தையாரிடத்து அச்சிறுவன் வடமொழி தென்மொழி
பயின்றார். இருமுறை படித்தல் அல்லது கேட்டலால் எவ்வளவு
வன்மையான செய்யுளும் பாடமாய்விடும். தான் கற்கும் நூல்களில்
ஐயவினா வினவினால், நீளநினைந்து பண்டிதர்கள் விடைகூறவேண்டிவரும்.
ஆனால் மிகுந்ததாழ்மையுங் கேண்மையும் வாய்மையுமாகப் பேசுவர்.
இவ்வாறு மிக்க கூர்மையும் நேர்மையுமாய்க் கேட்போர் உவக்குமாறு
மாதுரிய சாதுரியமாகப் பேசும் இயல்பு வாய்ந்துவந்தார். நெருங்கிய
பங்காளிகள் வாழ்ந்துள்ள பூந்துறைக்கு வந்தார். இவரது கல்விநலனை
அறியுமாறு அவ்வூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாரிச தீர்த்தங்கரர் பரமாக
ஒரு வெண்பாக் கூறுமாறு அவ்வாலய பூஜகர் வினவினர்.
"பச்சை
மணிவடிவாய்ப் பாரில்விசுவ சேனனக
மெச்சு மகவாய் வெளிவந்த - உச்சிதனாம்
பாரிச நாதன் பதநினைந்தோர் வாழ்வரே
சீரிசைநூ லின்பஞ் சிறந்து". |
என மனனஞ் செய்துள்ளார்
போல விரைவாகக் கூறினர். இதிற் சமய
உணர்ச்சிமிக்குப் பொதிந்து கிடத்தலைக் கேட்ட அங்குள்ளார்
மனங்களித்தார்கள். சைவ முதலிய ஏனைய சமய நூல் ஆராய்ச்சியை
உணர்தல் கருதி, ஸ்ரீ சுப்ரமணியர் மீது ஒரு செய்யுள் கூறுமாறு வேண்டினர்.
|