ஈண்டும் குலோத்துங்கனுடைய புகழ் இடையிடையே இயைபுறுத்தப்படுகிறது.
பின், காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் இயல்பைக் கூறத்
தொடங்குகின்றார் ஆசிரியர். பேய்களின் உறுப்பு நலங்கள் கூறப்படுவதும்
வியப்புச்சுவையில் மிகுந்து செல்கின்றது. ஈண்டுச் சில உறுப்புக்குறைந்துள்ள
பேய்களைக் கூறுவாராய், ஆசிரியர் குலோத்துங்கனின் பல போர்க்கள்
வெற்றிகளைக் குறிப்பிடுவது பெரிதும் நயஞ்சிறந்து தோன்றுவதாகும்.
பேய்கள் சூழக் காளி அரசுவீற்றிருந்த அமயத்தே இமயத்தினின்று வந்த
முதுபேய் ஒன்று தான் ஆண்டுக் கற்ற இந்திரசாலங்களைக் காட்டுவதாக
வைத்துக் கூறும் 'இந்திரசாலம்' என்னும் பகுதி நகைச்சுவை செறிந்து இன்பஞ்
செய்கின்றது.
இங்ஙனம், கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடுபாடியது, கோயில்
பாடியது, தேவியைப்பாடியது, பேய்களைப் பாடியது, இந்திரசாலம் என்னும்
ஏழு பகுதியும் பின்வரும் சிறந்த பகுதிகளோடு தொடர்புற்று நிற்கும்
தோற்றுவாய்ப் பகுதிகளேயாய் அமைந்து நிற்கின்றன.
இனிக், கலிங்கப் போர்த்தலைவனான குலோத்துங்கனைக் கூறப்புகுந்த
ஆசிரியர், அவன் சோழர் குடியின் வரலாற்று முறையினை ‘இராசபாரம்பரியம்’
என்னும் பகுதியில் கூறப்புகுகின்றார். முதுபேய் இமயத்தில் உறைந்த
காலையில், கரிகாலன் இமயத்தைச் செண்டு கொண்டு திரித்து, மீண்டும் அது
நிலைக்குமாறு தன் புலிக்கொடியைப் பொறித்தவனாகவும், அக்காலை
ஆண்டுவந்த நாரதன், திருமாலே குலோத்துங்கனாகப் பிறக்கவிருக்கும்
சோழர்குடி பெருமையுடையதென்றும், அக் குடியின் வரலாற்றைத் தான்
மொழியக் கரிகாலனை இமயத்தில் எழுதுமாறு பணித்தானென்றும், அங்ஙனம்,
நாரதன்
மொழியக் கரிகாலன் இமயத்து எழுதிய சோழர் வரலாற்று
முறையினை முதுபேய் கற்றுவந்ததாகவும், அதை அம் முதுபேய் காளிக்கு
மொழிவதாகவும் அமைக்கின்றார் ஆசிரியர்.
|