'முலையினொடும் மனுநீதி முறையினொடும்
மறையினொடும் பொழுது போக்கி'
|
என்று உணர்த்துகின்றார் ஆசிரியர்.
பல்கலைத் துறையிலும், வீரத்திலும் மேம்பட்டுப் பேரரசனாய்த்
திகழ்ந்த இவன் கடவுண்மாட்டன்பினும் முதிர்ச்சி பெற்ற
மனத்தினனாய்ச் சிறந்த சைவசமயச் செம்மலாய்த் திகழ்ந்திருந்தனன்.
இவன் நால்வகைப் படையுடனும் அமைச்சர் சூழவும் காஞ்சி நோக்கிப்
புறப்பட்டுச் சென்றவன் இடையே தில்லையிலும், அதிகையிலும்
தங்கியதோடன்றித் தில்லையினின்றும் புறப்படுவதற்குமுன் தில்லைக் கூத்தன்
அருள் கொண்டு அவன்பால் விடைகொண்டு புறப்பட்டனன் என்று ஆசிரியர்
கூறுவதால் இது தெரியப்படும்.
'தென்திசையி னின்றுவட திக்கின் முகம்
வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடி அருள் கொண்டுவிடை
கொண்டதிகை மாநகருள் விட்டருளியே'
|
என வருமாறு காண்க.
இவன் பேரரசனாந் தன்மைக்கேற்ப இவனது பெருமிதவியல்பை
ஓரிடத்து நமக்குக் காட்டுகின்றார் ஆசிரியர். இவன் காஞ்சியில்
செய்தமைத்த சித்திரமண்டபத்தே வீற்றிருந்தபொழுது மன்னர் பலரும்
வந்து திறை செலுத்தி முடிந்தபின், திறை செலுத்தாதோரும் உளரோ என
இவன் கேட்டபொழுது வடகலிங்கர்கோன் இருமுறையாகத் திறை
செலுத்தவில்லை என்ற உரை செவிப்படலும், இவனது இயற்கையை
உணர்த்தப் புகுந்த ஆசிரியர்,
'உறுவ தென்கொல்என நிலைகுலைந்தரசர்
உயிர்ந டுங்கஒளிர் பவளவாய்
முறுவல் கொண்ட பொருள் அறிகிலம் சிறிது
முனிவு கொண்டதிலை வதனமே'
|
என்று கூறுகின்றார்.
|