'கிடைக்கப் பொருது மண லூரில் கீழ்நா ளட்ட பரணிக் கூழ்'

எனப்  பின்னரும்  குறிக்கப்பட்டது.  மீண்டு  மொருமுறை  அளத்திப்
போர்க் களத்தில் ஆறாம் விக்கிரமாதித்தனை  வென்றி  கொண்டமை.

‘தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள்
அளத்தி பட்டத றிந்திலை ஐயநீ ’

என்னும் தாழிசையில் குறிக்கப்படுகிறது.

இவன் மைசூர் இராச்சியத்தைச் சேர்ந்த நவிலையில் பல சிற்றரசர்களை
வென்று,  பல  யானைகளைக்  கைக்கொண்டான். இப்போர்,

'கண்ட நாயகர் காக்கும் நவிலையில்
கொண்ட தாயிரம் குஞ்சரம் அல்லவோ'

என்று குறிக்கப்படுகின்றது.

இனி,  இவன்  காலத்தில் பாண்டிநாடு ஐந்து பிரிவாகப் பிரிக்கப்பட்டு
ஐந்து  அரசர்கள்  ஆண்டு   வந்தார்கள். இவன்  ஐவர்களையும்  வென்று
அவர்களை  அடிப்படுத்தி  மேம்பட்டனன்.

'விட்ட தண்டினின் மீனவர் ஐவரும்
கெட்டகேட்டினைக் கேட்டிலை போலும் நீ'

     என வந்தவாறு காண்க.

இவன்  பாண்டிநாட்டின்  மீது   படை   எடுத்தபொழுது  முத்துக்கள்
மிகுதியாய்க்   கிடைக்கும்  மன்னார்குடாக்  கடலைச்  சார்ந்த  நாட்டையும்,
பொதியிற்  கூற்றத்தையும்  கன்னியாகுமரியையும்,  கோட்டாற்றையும் தனக்கு
உரிமையாகக்  கொண்டதோடு,  இவற்றை  மீண்டும்  பாண்டியர் கவராவாறு
கோட்டாற்றில்,  கோட்டாற்று  நிலைப்படை என  ஒரு படையை நிலையாக
ஏற்படுத்தினன்.  இச்செய்தியை,