இனி,   அரசன்   நால்வகைச்   சேனையுடனும்   ஒன்று   குறித்துப்
பயணப்படுங்கால்    மறையோர்க்குத்    தான்    தருமங்கள்    செய்தும்,
கவிவாணர்க்குப்   பரிசளித்தும்   புறப்படுவன்.

பேரரசர்  புறப்படுங்கால்  அரசர் சயஒலி முழக்கலும், மறையவர் மறை
மொழிதலும் நிகழும்.

அரசர்   களிறூர்ந்து  செல்லலும்,  தேவியர்  பிடியூர்ந்து செல்லலும்
அக்கால வழக்கமாம்.

பயணஞ் செய்வோர் யானை யூர்ந்தும், தேரூர்ந்தும், சிவிகை யூர்ந்தும்
செல்வர். சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பட்டது. அரசர் புறப்படும்போது
சங்கொலியோடு பல்லியங்களும் முழங்கிச் செல்லும். யானை மீது முரசதிர்ந்து
செல்லும்.

இனிப், பேரரசர்க்குப்  பிற மன்னர்கள் திறையாக இடும்பொருள்களாக,
மணிமாலை,  பொன்னணி,  முடி,  பொற்பெட்டி,   முத்தமாலை,   மணிகள்
இழைத்த ஒற்றைச்சரடு, பதக்கம், மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை
முதலியனவும், யானை, குதிரை, ஒட்டகம், முதலியனவும் குறிக்கப்படுகின்றன.

அரசர்களின்   திறைப்  பொருள்கள்  எருதுகளின்மீது கொண்டுவரும்
வழக்கமும்  இருந்ததாகத்  தெரிகிறது.     

'பகடு சுமந்தன திறைகள்'

என வருமாறு காண்க.

இனி, அரசர்கள் பகையரசர் கோட்டையை அழிக்குங்கால்,

கோட்டை  வாயிற்  கதவண்டையில்    உள்ள   கணையமரங்களைக்
கைக்கொண்டு அவற்றைச் சிறந்த காரியங்களுக்குப் பயன் படுத்தலும் உண்டு.

  'கணைம ரங்கள்கொண் டெழுது தூணொடுத் தரமி யற்றியே'

என வருமாறு காண்க.

படை போருக்கெழுங்கால்,  சங்கு முழக்கியும், முரசதிர்ந்தும், இயமரம்
இரட்டியும், கொம்பு  ஒலித்தும் செல்வர்.