கலிங்கத்துப்பரணி நூலிலிருந்து அக்கால அரசர் இயல்புகளும்
அக்காலப் போர் முறையும் மக்கள் இயற்கையும், பிற
பொருளியல்புகளும் சிறப்புற அறியக்கிடக்கின்றன.
அக்கால அரசர்கள் படைக்கலப் பயிற்சி பெற்றபின், உடைவாளைத்
தம் அரையிலே பூணும் வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தனர். படைக்கலப்
பயிற்சி பெற்ற குலோத்துங்கனைக் கூறுமிடத்து,
'உடைவாளைத் திரு அரையின் ஒளிர வைத்தே' |
என்று கூறுகின்றார் ஆசிரியர்.
அரசர்கள் அரசு வீற்றிருக்கும்பொழுது அரசன் தேவியும் உடன்
இருத்தலும் அக்கால வழக்கமாம். குலோத்துங்கன் காஞ்சியில்
செய்தமைத்த சித்திரமண்டபத்தே அமைச்சரும், அரசரும் சூழ வீற்றிருந்த
காலையில்,
'தேவியர் சேவித் திருக்கவே'
|
எனக் குறிக்கின்றார் ஆசிரியர்.
அரசனுக்கு அணுக்கிமார் எனப்படுவோர் நாடகம் நிருத்தம்
முதலியவற்றினும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி எனும் நால்வகைப்
பண்ணினும் வல்லோராய், ஆடல் பாடல்களிற் சிறந்திருந்தனர்.
அரசவையில் வீணையாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவி வல்லார்
பலரும் ஒரு பக்கத்தே இருப்பர்.
அரசன் புகழ் பாடுவோராகிய சூதர், மாகதர், மங்கலப்பாடகர், வந்தியர்,
வைதாளிகர் என்போரும் அரசவையில் இருப்பர்.
அரசனுக்குப் பிறர் விருப்பத்தை அறிவித்தும், அரசன் கட்டளையைப்
பிறர்க்கறிவித்தும் ஒழுகுவோன் 'திருமந்திர ஓலையாள்' எனப் பெயர் பெற்று
அரசவையில் காணப்படுவான்.
|