இனி,  அக்காலத்தே உறங்குவதற்கான மெத்தைகள் ஐந்து  பொருளான்
இயற்றப்பட்டிருந்தன. அரசர் முதலியோர் பள்ளியுள் ஐவகை மெத்தையையும்
ஒன்றன்மேல்  ஒன்றாக  இடப்பெறும்.  ஐவகைப் பொருளாவன: வெண்பஞ்சு,
செம்பஞ்சு, இலவம்பஞ்சு,  மயிர்,  அன்னத்தின்  தூவி, காளி பேய்கள் சூழப்
பஞ்ச  சயனத்தின்மேல்  வீற்றிருந்தாளாகக்  கூறப்படுகிறாள்.

    இனிக்,   கட்டிலின்   ஒருவகை   தீபக்கால்  கட்டில்  எனப்  பெயர்
பெற்றிருந்தது.      காளி    தீபக்கால்     கட்டிலில்    வீற்றிருந்தாளாகக்
குறிக்கப்படுகின்றாள்.  அதன் கால்கள்  தீபக்கால்  வடிவில் வளைந்திருக்கும்
போலும்.

    அக்காலத்தே  நிலத்தின்  கீழ் நிலவறைகளும்  அமைக்கப்பட்டிருந்தன.

'பொங்கும் மதிக்கே தினம் நடுங்கிப்
புகுந்த அறையை நிலஅறை என்று
அங்கும் இருக்கப் பயப்படுவீர்'

    எனக் கடைதிறப்பில் வருமாறு காண்க.

    அக்காலத்தே  நீரடைக்கப்  பயன்பட்ட ஒருவகை மரம் 'குதிரைத் தறி'
எனப் பெயர்பெற்றிருந்தது. போர்க்களக்  காட்சியின்கண் இஃது உவமையாகக்
குறிக்கப்படுகின்றது.  

'படுங்குருதிக் கடும்புனலை அடைக்கப் பாய்ந்த
பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின்'

    என வந்தவாறு காண்க.