என்கின்றார். உதயகிரியில் நிலவு தனக்கு மேலே பொருந்தி விளங்க, ஞாயிறு புறப்பட்டாற் போன்று வெண்கொற்றக்குடை நிழற்ற யானையின்மீது அமர்ந்து புறப்பட்டான் குலோத்துங்கன் எனக் கூறுவது காண்க.
இனி, ஈதலறம் புரியும் மேலோரியல்பையும், ஈயாத உலோபியரியல்பையும், பொருட்பெண்டிர் இயல்பையும், கற்புடை மகளிர் இயல்பையும் சில இடங்களில் உவமையாயமைத்து அவ்வியல்புகளை மனம் பதியச் செய்யும் திறம் பெரிதும் போற்றற்குரியது.
போர்க்களக் காட்சியைக் கூறுகின்ற இடத்தே, அக்காட்சிகளுக்கு ஊதுகொம்பு ஊதுவோரையும், படகு வலிப்போரையும், கழைக்கூத்தர் மூங்கிலையும் உவமை கூறும் இடங்கள் பெரிதும் பொருத்தமுற்று இன்பஞ் செய்கின்றன.
குலோத்துங்கன் நால்வகைப் படையும் அரசரும் பிறரும் சூழக் களிறூர்ந்து செல்லுகின்றான். இக் காட்சியைத் தெருவின் இருபுறமும் மகளிர் திரண்டு நின்று பார்க்கின்றனர். அக்காட்சி கண்டு நின்ற மகளிரின்
மிகுதியைப் புலப்படுத்தல் கூறுகின்றார் ஆசிரியர்.
'எங்குமுள மென்கதலி எங்குமுள தண்கமுகம்
எங்குமுள பொங்கும் இளநீர்
எங்குமுள பைங்குமிழ்கள் எங்குமுள செங்குமுதம்
எங்குமுள செங்க யல்களே'
|
யாண்டுத் திரும்பினும் அழகிய பெண்களே காட்சியளித்து
நின்றமையின்; அவர்களையே கூறாது, அவர்களின் அழகிய
உறுப்புக்களாகிய தொடை, கழுத்து, கொங்கை, வாயிதழ், கண்
என்பவற்றைக் கூறுவார், வாழை பாக்கு மரம் இளநீர் குமிழம்பூ
செவ்வாம்பல் மலர் மீன் என உவமைப் பொருள்களையே கூறினார்.
மகளிரின் அழகையும் அவரது மிகுதியையும் புலப்படுத்திய திறம் சிறந்ததொன்றன்றே!
|