இனிக், கூறலுறும் பொருள் சிறந்து தோன்றுமாறு, தற்குறிப்பேற்ற
அணிபட இவர் கூறுமிடங்கள் பெரிதும் சிறந்து விளங்குகின்றன. காளி
உறையும் பாலையைச் சார்ந்த காட்டின் வெம்மையைக் கூறுமிடத்தே
தற்குறிப்பேற்றங்கள் பல அணி செய்கின்றன.
(1) கதிரவன், தன் மனைவியாகிய சாயாதேவி யாண்டுச் சென்றனளோ
என்று தேடுவானாய் வெடித்து நின்ற அப்பாலைவனத்தின் வெடிப்புத்
தொறும் தன் கிரணமாகிய கையைக்கொண்டு பார்ப்பானாம் (வெம்மையால்
நிலம் வெடித்து நின்றதைக் கூறினார்.)
(2) அப் பாலைநிலத்தே ஆண்டாண்டும் பறந்துசெல்லும் பருந்தின்
நிழல் காணப்படுவது, அப்பாலைநிலத்தின் வெம்மையைக் கண்டு அஞ்சி
அவ்விடத்தினின்றும் நிழல் புறப்பட்டு ஓடுவன போன்றிருந்ததாம்(பாலையில்
வேறு நிழல் இல்லை என்றபடி)
(3) பாலைநிலத்தில், கதிரவன் தெறுதலால் அதற்கு அஞ்சி ,மரத்தை
அண்டி நின்ற நிழல்கள், நீர்பெறாது வாடிவதங்கும் மரங்கள் தங்களை
உணவாகக் கொண்டுவிடுமோ என்று மீண்டும் அஞ்சி அவ்விடத்தினின்றும்
ஓடிவிட்டனவாம் . (மரங்களெல்லாம் இலையுதிர்ந்து நின்றன என்றபடி)
(4) வானவர்கள் நிலத்தில் அடியிட்டு நடவாமல் இருப்பது
அப்பாலைநிலத்தின் வெம்மையைக் குறித்தாம்.
(5) ஞாயிறு பாதிநாள் உலகில் வெளிப்பட்டுத்திரிந்து, பாதிநாள்
அங்ஙனம் திரியாததற்குக் காரணம், பாலையைக் கடந்த ஞாயிறு
பாதிநாளாவது களைப்பாறி யல்லாமல் அப்பாலைநிலத்தின் வழியாய்ச்
செல்ல இயலாதிருப்பதுதானாம்.
(6) மேகமும் நிலாவும் 'இப்பாலைநிலத்தைக் கடந்து விடுவோம்' என
மனத்துணிவு கொண்டு கடக்க, அங்ஙனம் கடந்து ஓடி இளைத்ததால் உடல்
வியர்த்த வியர்வையே மழையும் பனியுமாம்.
|