ராதலின்  அருகரென்ப.  இந்நூற்  காப்புச்  செய்யுளால் அவர் சிறந்த
சைவரென்றே  தெரிகின்றது.  இந்நூலின்  கடவுள்  வாழ்த்தில்   முதற்பாட்டு
உமாபதிக்கும்,    இரண்டாவது    செய்யுள்    திருமாலுக்கும்,   மூன்றாவது
நான்முகனுக்கும்,  பின்  இரவி,  பிள்ளையார், முருகன், நாமகள், உமையவள்,
ஏழு  மாதர்  என்பார்க்கும்  வணக்கமாகக்   கூறப்பட்டன.  சயங்கொண்டார்
செட்டிகள்மீது  'இசையாயிரம்'  நூல்  செய்ததாகக்  கேட்கப்படுகின்றது.

 __கா.சுப்பிரமணியபிள்ளை.

பரணி  யென்பது  தமிழ்  மொழியிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள்
ஒன்று;  போர்முகத்தில்  ஆயிரம்  யானைகளை  வென்ற வீரன்மேற் கடவுள்
வாழ்த்து,  கடை  திறப்பு  முதலிய  உறுப்புக்களை  அமைத்து  அவனுடைய
பலவகைச்  சிறப்புக்களையும்   பலமுகமாகப்   புறப்பொருளமைதி   தோன்ற
ஆங்காங்கு  விளக்கிக்  கலித்தாழிசையாற்  பாடப்படுவதென்பர்; பெரும்போர்
புரிந்து வெற்றிபெற்ற வீரனைச்  சிறப்பித்துப்  பாடுவதையும்  பரணி  யென்று
கூறுவர்.

பரணி  யென்னும்  பெயர்க்  காரணம்   பலவாறாகக்   கூறப்படினும்
காளியையும்,  யமனையும்  தன்  தெய்வமாகப்  பெற்ற   பரணி   யென்னும்
நாண்மீனால்  வந்த  பெயரென்பதே  பொருத்தமுடையதாகத் தோற்றுகின்றது.
இது "காடு  கிழவோன்  பூத  மடுப்பே,  தாழி   பெருஞ்சோறு   தருமனாள்
போதமெனப்,   பாகுபட்டது   பரணிநாட்   பெயரே,"   என்னும்   திவாகர
முதலியவற்றால்  விளங்கும்.

‘பரணி   பிறந்தான்   தரணியாள்வான்’    என்னும்   பழமொழியும்,
‘பரணியான்  பாரவன்’'    (நன்.சூ. 15 மயிலை)    என்னும்   மேற்கோளும்,
"பரணிநாட்  பிறந்தான்"  (சீவக ,1813)  என்பதற்கு, 'பரணி   யானை  பிறந்த
நாளாதலின்  அது  போலப்  பகையை    இவன்     மதியான்'     என்று
நச்சினார்க்கினியர்    எழுதிய   விசேடவுரையும்   பரணிநாள்   வெற்றியின்
சம்பந்தமுடைய  தென்பதைத்  தெரிவிக்கின்றன.

டாக்டர். உ.வே. சாமிநாதையர்.