பதிப்புரை பண்டைக் காலத்துத் தமிழகத்தில் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலாகிய நானிலங்களும் தத்தம் வளங்குன்றாது பயன்களைத் தந்துதவின; அதனால் முற்கால மக்கள், பசியும் பிணியும் பகையுமின்றி இன்பமிக்காராய் வாழ்ந்திருந்தனர்; அவர் வாழுமிடங்களான காடு நாடு யாண்டும் ஆடலும் பாடலும் அமைந்திருந்தன; கழனிகளில் நீர்வாழ் பறவைகளின் பரந்த ஒலிகளும், நீரின் ஓதையும், வண்டின் முரற்சியும், தவளைகளின் தழங்குறு பாடலும் வயல்வாணராகிய மள்ளர்க்குச் செவியின்பந் திளைக்கச் செய்தன; களமர்கள் எருத்தினத்தை ஏரிற் பூட்டி உழுங்கால் மருதப் பண்ணால் அவைகளை வயக்குறுத்துக் கழனிகளை உழுது தொளியாக்கி அதில் நாற்று நடச்செய்வர்; மள்ளர் மகளிர் ‘வயல் வாழ்க; விளைவு மல்க’ என வாழ்த்திச் சேறு செய்த வயலில் நாறு நடுவர். அக்காலத்துத் தம் நாவசைத்துக் குரவையொலி செய்து மகிழ்வர். மருதநிலத்தைப் பலவகைப் பாடல்களால் வாழ்த்திப் பாடுவர்; வள்ளைப் பாடலால் மள்ளர் மனத்தை மகிழ்விப்பர். இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த மள்ளர்மகளிர் பாடலே ‘உழைத்தியர் பாட்டு’ என, உயர்த்திக் கூறப்பெறும் சிறப்பு வாய்ந்ததாகும். இப்பாட்டே பிற்காலத்தில் ‘பள்ளு’ப் பாடலாக மலர்ந்தது. பள்ளு என்பது, வேந்து அமைச்சு என்பன போலப் பள்ளர் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் புனைந்துரையாகச் சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாவாய்ப் பாடப் பெறுவது; கோவைகள் போல ஒரு தலைவன் நாட்டகத்தே நிகழ்வதாக உரைத்துச் செல்லும் பெற்றிமை வாய்ந்தது. இவற்றின் பாடல்கள், கொச்சகக் கலிப்பா, விருத்தம், சிந்து போன்ற சிற்றடி பேரடிகளால் இயன்று கற்பார்க்குச் சுவையின்பந் தந்து மகிழ்விப்பன; இப் பாடல்கள் இசைப் பாடலாகப் பாடற்கும், நாடகமாக நடித்தற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளனவாகும். இத்தகைய பள்ளு நூல் பல, நந்தமிழகத்தின்கண் மலர்ந்து வளர்ந்து மக்கள்பாடலோர்த்தும் நாடகம் நயந்தும் பயன்பெற விளங்கின. |