முகப்புதொடக்கம்
4 முக்கூடற் பள்ளு

இப்பள்ளுகளுள் ஒன்றே ‘முக்கூடற் பள்ளு’எனப் பெயரிய இந் நூல். இது பாண்டி நாட்டின் கண் விளங்கும் முக்கூடல் நகர்க்கண் எழுந்தருளியிருக்கின்ற அழகர் ஆகிய இறைவன்மேற் பாடப் பெற்றதாகும். இது சொன்னலமும் பொருள்நயமும் ஓசையின்பமும் ஒருங்கே வாய்ந்த சீரிய நூல்; இந் நூலாசிரியர் பெயரும் விரும்பாப் பெற்றியர் போலும்! பெயரும் பிறவும் அறிதற்கில்லை. அவர்தம் பேரும் ஊரும் பிறவும் மறைய எழுத்தசை சீர் அடித் தொடைகளால் இயன்ற புகழுடல் பெற்று நம்முன் இதோ காட்சி தருகின்றார்.

சீரும் ஏரும் சேர்ந்த இந் நூலைப் பேராசிரியர் உயர்திரு. மு. அருணாசலம் பிள்ளையவர்கள் திருத்தஞ் செய்து குறிப்புரையுடன் சில்லாண்டுகட்குமுன் வெளியிட்டுள்ளார்கள். அதனால் நம் தமிழ்மக்கள் பள்ளுநூலைச் சுவைக்கும் பேறுற்றனர். இவர்களின் இத் தொண்டு போற்றற்குரிய தொன்றாம். எனினும் விளக்கங்களுடன் கூடிய நல்லுரையுடன் இதனை வெளியிடப் பல்கால் எண்ணினோம்.

‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார், திண்ணியராகப் பெறின்’ என்னும் அறிவுரைக் கேற்ப, அரிய திருத்தங்களுடனும் ஆசிரியர் கருத்தறிந்த திறப்பாட்டோடும் விளக்கமிக்க பேருரையைத் தம் அரிய அலுவல்கட்கு இடையே உலகு பயன் கருதிச் செந்தமிழ்ஞாயிறு, வித்துவான், உயர்திரு. ந. சேதுரகுநாதன் அவர்கள் ஆக்கித் தந்தார்கள்; அதற்கு அவர்கட்கு எம் உளங்கனிந்த நன்றி.

இத் திருநூலை அருமைப் பேறுற நூலுருவாக்கி அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். தமிழ்கூறு நல்லுலகமக்களும், ஆய்புலவாணரும், சுவைஞரும், தமிழின்பமும் மருதத் தண்பணைவளமும் காண்பார் வாங்கிக் கற்றுக் கற்பித்துப் பெரும்பேறெய்துவார்களென நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்