வழக்கு. அயர்தல் - செய்தல், நடத்துதல் என்று பொருள் தரும். “சாறயர் வீதி” என்பது தஞ்சைவாணன் கோவை. எனவே, “சாறுயர்” என்பதைக் காட்டிலும் “சாறயர்” என்பது சிறத்தல் காண்க. 39 ஆம் பாட்டில் "சாயும் புனலமுத தாரை" என்று பதிப்பித்திருக்கின்றனர். பழைய பதிப்பில், “சாயும் புயலமுத தாரை” என்றிருக்கிறது. சாய்தலாகிய வினைக்குப் ‘புயல்’ என்றிருக்கும் பாடமே பொருந்தும். “காகமணு காமலையில் மேகநிரை சாயும்” என்பது குறவஞ்சி. 38 ஆவது பாட்டுமுதல் 48ஆவது பாட்டின் தொடக்கம் வரை நூல் அந்தாதியாக நடக்கின்றது. இந்தப் பாடல்களின் இடையில் கவிக்கூற்றாக வருகின்ற கொச்சகக் கலிப்பாவினோடு அந்தாதி தொடராமல் ஒன்றுவிட்டொன்றாகவே அந்தாதி தொடர்கின்றது. 44 ஆவது பாட்டில், "மால், கொள்ளுங் கயத்தை நிகர்த்து--மருதம் துள்ளுங் கயத்தில் பரந்ததே" என்று அச்சிட்டிருக்கின்றனர். மதயானை போன்று முடுகிச் செல்லும் வெள்ளம் கயத்தில் (நீர்த்தடாகத்தில்) “பாய்ந்தது” என்று சொல்வதே பொருத்தம். ‘பரந்தது’ என்ற பாடம் தவறு. “பாய்ந்ததே” என்ற பாடம் பழைய பதிப்பில் இருக்கின்றது. “பாயும் மருதஞ் செழிக்கவே” என்று தொடங்கும் 46 ஆவது பாடலின் முதல் இந்தப் “பாய்ந்ததே” என்பதிலிருந்து தொடர்ந்த அந்தாதியாதலும் காண்க. 46 ஆம் பாட்டில், "பகட்டுக் கமலக் குட்டத்திற்--புனல் தகட்டுக் கமல வட்டத்தில" என்று பதிப்பித்திருக்கின்றனர். |