இவர்கள் பழைய பதிப்பு ஒன்று வெளிவந்திருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள வாய்ப்புப் பெறவில்லை. ஆதலால் தமது பதிப்பிற்கு முன்பு முக்கூடற் பள்ளு அச்சிடப் பெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இவர்களின் பதிப்பு வந்த பின்புதான் நாடெல்லாம் முக்கூடற் பள்ளினைப் பற்றி அறியவும் படிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த முறையில் இவர்களுக்கு நன்றியும் பாராட்டும் உரியன. என்றாலும் இப் பதிப்பிலும் பிழைகள் மிகப் பல. இவ்வளவு பிழைகள் இருப்பினும் பாராட்டுக்கு உரியவர்களே. இனி இவர்கள் பதிப்பிலுள்ள பிழைகள் சிலவற்றையும் திருத்தங்களையும் காட்டுவது படிப்பவர்களுக்குப் பயன் தருமாதலால் அவற்றை நோக்குவோம். 11 ஆவது பாட்டில், "சுருதியெண் ணெழுத் துண்மைப் பெரிநம் பியைத் தொழாத் துட்டர்செவி புற்றெனவே கொட்டால் வெட்டுவேன் " என்ற பகுதியில், எட்டெழுத்தின் உண்மையைப் பெரிய நம்பியினிடத்தில் கேளாத துட்டர் செவியைப் புற்றைப்போல நினைத்து மண்வெட்டிக் கொட்டால் வெட்டுவேன் என்று கூறுவதே பொருத்தம். “பெரிய நம்பியைக் கேளாத் துட்டர்செவி” என்ற பாடம் பழைய பதிப்பில் இருக்கின்றது. பெரிய நம்பியை வணங்குவதற்கு வற்புறுத்த இடமில்லை. அவர் கூறும் மெய்ப்பொருளைக் கேளாத செவியைப் பொந்து விழுந்த புற்றாக நினைத்து வெட்டுவேன் என்று கூறுகிறான். ஆகவே “கேளா” என்ற பாடம் சிறத்தல் காண்க. 24 ஆம் பாட்டில், "நித்தம் சாறுயர் சித்ரம் படைக்கும்" என்று பதிப்பித்திருக்கின்றனர். “சாறயர்” என்ற பாடம் இருக்கின்றது. சாறு-விழா. விழாவயர்தல் என்பது திருவிழாக் கொண்டாடுதல் என்று பொருள் தரும். விருந்தயர்தல் என்பதும் |