முகப்புதொடக்கம்
முன்னுரை 15

53 ஆவது பாட்டில்,

"நீறுபோல் எழுந்த மூளை
ஊறு நாசியும்"

என்று தந்திருக்கின்றனர்.

"நீறுபோல் வெளுத்த வூளை
ஊறு நாசியும்"

என்ற பாடமே பொருந்துகின்றது காண்க. இந் நூலின் தொடர்களை எடுத்தாள்கின்ற இயல்பு உள்ள தண்டிகைக் கனகராயன் பள்ளில்,

"நீறுபோல் வேவெளுத்த
தூறுதலை யும்"

என்றிருக்கிறது. இவ்வாறே முக்கூடற்பள்ளிலும் இருந்தால் நன்றாயிருக்கும்.

74 ஆம் பாட்டில்,

"தினமும் நான்பகற் காணேன் இராத்திரி
தேடிப் பூதம் எடுக்குங் காணாண்டே"

என்று அச்சடித்திருக்கின்றனர்.

"தேடிப் பூரம் அடுக்குங்காண் ஆண்டே"

என்று ஏட்டுச் சுவடியில் உள்ளது. இதுவே மிகவும் பொருத்தமான பாடம் என்பதனை இந் நூலின் உரை நோக்கிக் காண்க. “பூரம்” என்ற பாடம் கொண்டு உரை எழுதிய பின்பு பறாளை விநாயகர் பள்ளினைப் பார்த்தேன். அந் நூலாசிரியரும் ‘பூரம்’ என்ற பாடத்தையே முக்கூடற் பள்ளிலிருந்து படித்திருக்கின்றார். யான் இதற்குக் கூறிய பொருள் கொண்டே அவரும் உணர்ந்திருக்கின்றார்.

"மற்றப் பாம்புக்கும் பூரத்துக்கும் பகல்
வைத்த நாணுகம் ஒன்றுண்டே யாண்டே."

என்பது பறாளை விநாயகர் பள்ளு பாம்பாகிய ஆயிலியத்திற்கும் பூரத்திற்கும் (நட்சத்திரம்) இடையில் நிற்கின்ற நுகமாகிய மகம் என்ற (நட்சத்திரம். நோக்கால்) நுகம் ஒன்றுதான் உண்டு என்பது பொருள்.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்