110 வது பாட்டில், “வயலுழுங் குத்தி” என்பதற்கு வயலில் உழுவதற்கு ஆகும் கலப்பைக் குத்தி (குற்றி) என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும். ஆனால், உயர்திரு. மு. அரு. “குத்தி-பாரை; பெரும்பாலும் இது இரும்பாலானது” என்று எழுதியிருப்பது பிழை. வளைக்கை என்பதற்கு வள்ளக்கை என்று உரை எழுதுதல் வேண்டும். ஆனால், “கடைமுளை” என்று எழுதியுள்ளனர். இதுவும் பொருந்தாமை உரை நோக்கிக் காண்க. 38 ஆம் பாட்டில் மழை பெய்து வெறித்த முறைமை கூறப்படுகின்றது. வடமலையப்ப பிள்ளையனின் யானையைப் போன்றுமேகம் கருப்பு நிறங்கொண்டு மழைபெய்து இந்திரனது வெள்ளை யானையைப்போல் வெளிறிற்று என்ற கருத்தமையப் பாடப்பட்டுள்ளது. “கழுத்தினில்” என்பது “களிற்றினில்” என்றிருக்கவேண்டும். ஆனால், சுவடியிலும் பழைய பதிப்பிலும் “கழுத்தினில்” என்றே காணப்படுகின்றது. அஃது ஏடு எழுதியோர் செய்த தவறாக இருக்கலாம். இப் பாட்டில் “மாவிற் கறுத்து” என்ற பகுதிக்கு “மா-குதிரை. வடமலேந்திரனது குதிரை கறுப்பென்பது இதனால் தெரிகின்றது,” என்று குறிப்பும் எழுதி முகவுரையில் வடமலையப்ப பிள்ளையனைப் பற்றி எழுதுங்கால் அவர், “குதிரை சவாரி செய்பவரென்பதும், இவர் குதிரை கறுப்பு நிறமுடையதென்பதும் இந் நூலால் விளங்குகின்றன” என்றும் திரு. மு. அரு. குறிப்பிட்டுள்ளனர். இவைகளெல்லாம் பிழைகளாதல் காண்க. இன்னும் சந்தச் சிதைவுகளும் பிழைகளும் விரிவஞ்சி விடுக்கப்பட்டன. நூல் முழுதும் படித்துக் காண்க. திரு. மு. அரு. இவ்வளவு பிழைகளுடன் வெளியிட்டாலும், பழைய பதிப்பினும் இவர் பதிப்புச் சிறந்ததேயாகும். ஆகவே அவர்களுக்கு என் நன்றி யுரியது. இந்த வெளியீட்டிலும் நேர்ந்துள்ள பிழைகள் சில எடுத்துக் காட்டத்தக்கன. இத் திருத்தத்தையும் படிப்போர்தங்கள் நூல்களில் திருத்திக்கொள்ள வேண்டுகின்றேன். 9 ஆம் பக்கம் 13 ஆம் வரியில் “தாளவிதத்து.........இகழ மாட்டார்கள்” என்ற உரைப் பகுதியை 8ஆம் பக்கத்து 26ஆவது |