"மதயானை முதற்பிடிக்க வல்லாய்--இந்த மாட்டுக்கு மாட்டாமற் போனதென்ன சொல்லாய் கதையோமுன் மலைகளையும் முறித்தாய்--அந்தப் பலங் கண்டிலேனான் என்றோடி மறித்தாய் சதுர்வேதன் விதித்ததலைப் பொறியோ--மருதூர்ச் சக்களத்தி புலைமருந்தின் வெறியோ முதலேயீ தார் விளைத்த இடும்போ--தெரிந்திலேன் முக்கூடல் அழகர்ப்பண்ணைக் குடும்பா" என்று இரங்குவதும்; இளைய பள்ளி, "வடுப்படா மேனிவடுப் படுமோ--நன்று நன்றென் வல்லாளன் சமர்த்தும்போய் விடுமோ தடுத்துநீ ஏன்மாட்டைத் தொடர்ந்தாய்--முக்கூடல் சதுரிபார்த்துச் சிரிக்கவோ கிடந்தாய் அடுத்திதுவும் உனக்குவர முறையோ--மலையின்மேல் ஐயா பூலாவுடையார் குறையோ படுத்தகிடை எழுந்திருந்து கொள்ளாய்--வடிவழகர் பாதம்மற வாதபண்ணைக் குடும்பா" என்று வருந்திக் கூறுவதும் அவலச்சுவை தருதல் காண்க. கவிஞரின் கூற்றாக வரும் பாடல்களில், "குன்றைக் குடைகவித்த கோவலர்முக் கூடலிலே இன்றைக் கிரவில் இவளைஎவர் தேற்றுவரே கன்றைக் கழுத்தணைத்துக் கற்றாவைக் கூவுமண்டர் கொன்றைக் குழல்பூங் குழலிசெவிக் காகாதே" என்றும், "தாற்றுக்கால் பூந்துளவத் தாரழகர் முக்கூடல் சேற்றுக்கால் மள்ளருக்குத் தென்றற்கால் என்னாமோ ஆற்றுக்கால் ஆட்டியருள் ஆட்டெழுங்கால் பண்ணை நடும் நாற்றுக்கால் விட்டு நடுகைக்கால் ஏறாதே" என்று வரும் கவிதைகளின் சுவை நலத்தை அவல உணர்வால் பிறக்கும் கவிதையின் பேரின்பத்தைக் காலமெல்லாம் பாடி நுகர்ந்து கொண்டே யிருக்கலாம்; சலிப்பே தோன்றாது. |