"ஒண்டிவயிற்றுப் பண்டிப் பானைத் தொண்டிக் கள்ளை மண்டியே எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவக் குடும்பன் மருமகன் ஈச்சக் குடும்பன் பாச்சக் காலை எட்டி முட்டித் தட்டியே" என்று வரும் பாடல்களில் இழிப்புச் சுவை காண்க. 5. உவகை (காமம்) இனிக் காமச்சுவையை நோக்குவோம்; உண்டாட்டின் மயக்கத்தினால் காதல் வரம்பு கடந்தே வெளிப்பட்டுவிடுகிறது. "தையலி மகள் பொய்யலி கிட்டச் சாடிப் பெரியான் ஓடிப்போய் கள்ளாலுற்றது மீறியே நிலை கொள்ளாமல் தடுமாறியே காப்பைக் காட்டென்று கையைப்பிடிக்கும் கோப்பைப் பாரும் பள்ளீரே" என்றும், "முத்தக் குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டிச் சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக் கிளைய நூவிதன் குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்தச் சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கவன் மெள்ளப் பேசிப் பார்க்கும் ஆசையால் எத்தத் துணிந்து அதட்டிட் டவள்முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறாப் போலக் கிட்டக் கிட்டப்போய் அடுக்கிறான் பாரும்பள் ளீரே" என்றும் உவகைச் சுவை தரும் கவிகள் வருதல் காண்க. 6. அவலம் (சோகம்--அழுகை) பள்ளனை மாடுமுட்டி விடுகிறது; மயங்கி விழுகிறான்; மூத்தபள்ளி வருந்திப் புலம்புகிறாள். |