இந்நூல், தெய்வநலனும் மக்கள்நலனும் கூறும் நூல்; இருசமயப் பொது நூல். தெய்வத்தலைவன், மக்கட்டலைவன், தொழிலாளர் தலைவன், தொழிலாளித் தலைவன், தொழில் செய்யுந் தலைவியர் ஆகிய இவர்களின் தலைமைகொண்டு ஓர் அரிய பொது நூலாக விளங்குதல் காண்க. இத்தகைய முறைமையில் எல்லோரையும் கவர்ந்து படிக்கச்செய்து இடைக்காலத்தில் மக்கள் வாழ்வுடன் தமிழுக்கு உறவு உண்டாக்கிய சிறந்த நூல். இந்நூலிற் கூறப்பெற்றோர் ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன், காவை அம்பலவாணர், காவை வடமலையப்பப் பிள்ளையன், சாத்தூர் பெரிய நம்பி ஐயங்கார் ஆகிய இவர்கள் இந் நூலில் இடம் பெறுகின்றனர். இன்னும், தாண்டவராயன், மகாராசன் என்பவர்களும் குறிப்பிடப் பெறுகின்றனர். இந்நூலின் காலம் ஆறை அழகப்ப முதலியாரும், திருமலைக்கொழுந்துப் பிள்ளையனும் ஆகிய இருவரும் வாழ்ந்த காலமே இந் நூலின் காலம். ஆகவே, கி. பி. 1676 முதல் 1682க்கு இந்நூல் இயற்றப் பெற்றதாகக் கொள்ளலாம். சிறப்புப் பாயிரம் இந் நூலின் முதற்பதிப்பு உருத்திரோற்காரி ஆண்டு ஆடித் திங்கள் வெளிவந்தது. அதில் விருத்தாசலம் தியாகராசக் கவிராயர் இயற்றிய சிறப்புப் பாயிரம் ஒன்று உளது அது வருமாறு: "பூவிழை விரிஞ்சன் நாமரு வியவென் பாமக ளோடுநம் பகவன்முக் கூடற் சிரையனா ரென்னும் இறையனார் கபிலர் கறையிலா தொளிர்செந் தமிழ்க்கட லருந்தி இக்கீர மாக்கவி இசைக்கும் புலவன் நக்கீர தேவ நாவலர் நவிற்றும் அப்பா வலன்சேய் அருட்கல் லாடர் முப்பா வலர் பரணர்முதல் யாவரும் வாழ்த்தும் பொருநை வளந்தருங் கூடல்" |