திருவருட்பா

இரண்டாம் திருமுறை

முதல் தொகுதி

உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி,

ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை  

வாழ்க்கை வரலாறு

தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒளவையார் குப்பம் என்ற கிராமம்; அதில் சுந்தரம் பிள்ளை என்ற திருமகனாரும் சந்திரமதி அம்மையார் என்ற திருமகளாரும் மனமொன்றிய தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

சுந்தரம்பிள்ளை ஊர்க்கணக்கராகப் பணியாற்றி வந்தார் என்றாலும், கன்னித் தமிழ்மீது கட்டுக்கடங்கா அன்புகொண்டவராக விளங்கினார். அன்பு மட்டுமல்லாமல், அம்மொழியில் மிக்க ஆற்றல் பெற்றவராகவும் திகழ்ந்தார். இப்பெருந்தகை மயிலம் முருகன்மீது பல செய்யுள் நூல்கள் இயற்றி உள்ளார்.

இந்த அன்புத் தம்பதிகளுக்கு ஐந்தாம் குழந்தையாக 1902 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாள் ஆண்மகவு ஒன்று பிறந்தது. அதற்கு துரைசாமி என்று பெற்றோர்கள் பெயரிட்டார்கள்.

அக்குழந்தை பிற்காலத்தில் தமிழகத்தில் உரைஉலகில் ஒரு பொற் காலத்தை உருவாக்கப் பிறந்ததாலோ என்னவோ, இறைவன் ஒளவை என்னும் சொல்லை முதலாக உடைய ஊரில் அந்தச் செந்தமிழ்ச் செல்வத்தைப் பிறக்க வைத்தார்.

துரைசாமிப்பிள்ளை, தொடக்கக் கல்வியை உள்ளூரில் கற்றார். பின் திண்டிவனம் அமெரிக்கன் ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை கற்றார்.

அந்த இளமைக் காலத்திலேயே துரைசாமிப்பிள்ளைக்கு இருந்த தமிழ்ப்பற்றால் ஓலைச் சுவடிகளை ஆய்கின்ற பயிற்சியினை மேற்கொண்டார். வேலூர் ஊரிசு கல்லூரியில் கல்லூரிக் கல்வியினை மேற் கொண்டார்.

வருவாய் தேடவேண்டிய நிலை வந்ததால், முதலில் துரைசாமிப் பிள்ளை உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளராகவே பொறுப்பேற்றார். என்றாலும், தமிழ்மொழிமேல் அவர் கொண்ட பெரும்பற்றால் இப்பொறுப்பினைச் சிறிது காலத்திலேயே விட்டுவிட்டார்.

தமிழை முறையாகக் கற்க முடிவு செய்தார். நாவலர் ந. மு. வேங்கட சாமியார் அவர்களிடமும், பாவரசு வேங்கடாசலம் அவர்களிடமும், சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் பழுதறக் கற்றார்.

சைவசமயக் கல்வியைக் கந்தசாமி தேசிகர், தவத்திரு வாலையானந்த அடிகள் ஆகியோரிடம் கற்றுத் தெளிந்தார். 1930-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் பட்டமும் பெற்றார்.

வடார்க்காடு மாவட்டம் கழக உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினை ஒளவை பெற்றார். அம்மாவட்டத்தில் பல பள்ளிகளில் அவர் பணியாற்றினார். அதுசமயம் அவர் நடத்திய திருக்குறள் வகுப்புகள் பேரறிஞர்களையும் கவரும் தன்மைபெற்று விளங்கின.

துரைசாமிப் பிள்ளைக்கு திருமதி உலோகாம்பாள் என்னும் அம்மையாரை மணம் முடித்தனர். துரைசாமிப் பிள்ளையின் இல்லறம் என்றும் நல்லறமாக அமைந்தது.

இப்பெருமக்களின் இல்லற வாழ்வின் பயனாக திருவாளர்கள் ஒளவை நடராஐன், ஒளவை திருநாவுக்கரசு, ஒளவை ஞானசம்பந்தன், மெய்கண்டான், நெடுமாறன்; திருமதிகள் பாலகுசம் அம்மையார், மணிமேகலை, திலகவதி அம்மையார், தமிழரசியார் ஆகியோர் அறிவறிந்த நன்மக்களாக வாய்த்தார்கள்.

துரைசாமிப்பிள்ளை தமிழ் கற்றுத் தேர்ந்ததோடு, பிறமொழித் தாக்குதல்களிலிருந்து தமிழைக் காக்கும் பெரும் பணியையும் தொடக்க முதலே மேற்கொண்டார்.

உயர்நிலைப் பள்ளிப் பணியிலிருந்து நீங்கித் திருவேங்கடவன் தமிழ்த் திசைக் கல்லூரியில் பேராசியராகப் பணியேற்றார். இதன் பின்னர் துரைசாமிப்பிள்ளையின் தமிழ்ப்பணி மிக ஆக்கபூர்வமாக அமைந்தது.

நாவலர் ந. மு. வேங்கடசாமி அவர்கள் மணிமேகலையில் அமைந்துள்ள சமயப்பகுதிகளுக்கும் தருக்கப்பகுதிகளுக்கும் சீரிய உரை காணுமாறு துரைசாமிப் பிள்ளையிடம் பணித்தார். அதற்கு உடன்பட்ட துரைசாமிப்பிள்ளை வடமொழி வல்லவர்கள் பலரின் பெருந்துணையுடன் வடமொழி நூல்களை மிகச் செம்மையாகக் கற்று, மணிமேகலைக்கு மிகச் சிறந்த உரை கண்டார்.

தொல்காப்பியம், திருக்குறள், சிந்தாமணி, இறையனார் களவியல், சிலப்பதிகாரம் முதலிய பெருநூல்களுக்குப் பல உரைகள் பல பெருமக்களால் வரையப்பட்டன. அக்கால எல்லைக்குப் பின் அத்தகைய பெரும் புலவர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க வகையில் உரை எழுதும் வழியில் துரைசாமிப்பிள்ளை தன்னிகரற்றவரானார். அதனால் அவரைத் தமிழ் உலகம் உரை வேந்தராகக் கண்டது; ஒளவையாகக் கண்டது.

ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை எழுதித் தமிழகத்திற்கு வழங்கியவைகள் பலவாகும்.

யசோதரகாவியம் என்ற சமணசமய இலக்கிய நூலைச் சுவடியிலிருந்து ஆராய்ந்து உரைகண்டு பதிப்பித்தார்.

தமிழ்ப் பெரும் புலவர்களின் பேராலயமாக விளங்குகின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகம் துரைசாமிப்பிள்ளையை தமிழ்த்துறையில் சேர்த்துக் கொண்டது. அங்கிருந்தபோதுதான் ஒளவை துரைசாமிப்பிள்ளை சைவசமய இலக்கிய வரலாறு என்ற அரிய வரலாற்று நூலை உருவாக்கினார். ஐங்குறுநூறுக்கு உரைகண்டார். இவற்றோடு சைவசமயப் பெருநூலான ஞானாமிர்த நூலை ஆராய்ந்து விளக்கம் எழுதினார். இந்நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடுகளாக மலர்ந்தன.

அடுத்து துரைசாமிப்பிள்ளை செய்த பெரும்பணி புறநானூற்றுக்கு உரை கண்டதாகும். நற்றிணைக்கும் உரை கண்டார். பெரிதும் முயன்று பதிற்றுப்பத்திற்கும் உரை கண்டார்.

தமிழ்ப் பணி என்ற பெரும்பயணத்தை மேற்கொண்ட துரைசாமிப் பிள்ளை, பின் மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசியராகப் பொறுப்பேற்றார். எண்ணற்ற மாணவர்கள் உரைவேந்தர்பால் தமிழ் கற்று அறிஞர்கள் ஆயினர்.

உரைவேந்தரின் உரைகாணும் பணிகளின் சிகரமாக அவர் திருவருட்பாவிற்கு உரைகண்ட பணி அமைந்தது. அருட்செல்வர் திரு. ந. மகாலிங்கம் அவர்கள் நல் உதவியோடு திருவருட்பா பாடல்கள் அனைத்திற்கும் தெளிவும் திட்பமும் நுட்பமும் மிகுந்த உரைதனைக் கண்டார்.

மதுரைப் பல்கலைக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகங்களின் ஆய்வுக்கு உரைவேந்தரைப் பேராசிரியராக அமர்த்தியது. அப்போது, தமிழ்நாட்டு ஊர்ப்பெயர் வரலாற்றாராய்ச்சி நூல் உரைவேந்தரால் உருவாக்கப்பட்டது.

உரைவேந்தர் நாவேந்தராகவும் விளங்கினார். இலக்கிய சமய மேடைகளில் அவர் சொற்கள் ஆலயமணிகளின் அற்புத ஓசைகளாகவே முழங்கின.

துரைசாமிப் பிள்ளைக்கு உரைவேந்தர் பட்டத்துடன், சித்தாந்த கலாநிதி, பேரவைச் செம்மல் என்ற சிறந்த பட்டங்களையும் உயர்ந்த அமைப்புகள் வழங்கிச் சிறப்பித்தன.

மகேந்திரவர்மப் பல்லவன் வடமொழியில் இயற்றிய நாடகமான மத்த விலாசத்தை உரைவேந்தர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனவும், சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக எனவும் முழக்கமிட்டு வாழ்நாள் முழுதும் திகழ்ந்த தமிழ்ப் பெருமானாரான ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள், 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

உரைகாண்பதில் தனி உலகையே அமைத்து வேந்தரான துரைசாமிப்பிள்ளை அவர்களின் பொன்னான புகழ், உலகுள்ளளவும், உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அவர் அரும்பணி வருங்காலங்களுக்குப் பெரும் வழிகாட்டியாகும்.