இரண்டாம் திருமுறை
முதல் தொகுதி
அருட்பிரகாச
வள்ளலார்
இராமலிங்க
சுவாமிகள்
வாழ்க்கை
வரலாறு
தமிழ்நாடு செய்த பெரும் தவப்பயனால் பச்சைப் பயிரோடு பக்திப் பயிரையும்
வளர்க்கும் தென்னார்க்காடு மாவட்டத்தில், இறைவன், திருக்கூத்தாடும் தில்லையின் திருநகரை அடுத்து உள்ள மருதூரில், இராமையாபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும்
மகவாக இராமலிங்கர் தோன்றினார். அவர் பிறந்த நாள் 5-10-1823 ஆகும்.
இவருடன் பிறந்தோர் சபாபதிப்பிள்ளை, பரசுராமப்பிள்ளை என்போர் ஆவர்.
வாழையடி வாழையாக வந்த அருள் திருக்கூட்டமரபில் உதித்த
இராமலிங்கருக்குச் செந்தமிழ்க் கடவுளாகிய
முருகப்பெருமானது திருக்காட்சி இளமையிலேயே கிடைத்தது.
மக்கட் பிறவியினரையே குருவாகப் பெறும் மானிடர்
உலகில், மறைமுதல்வனின் மகனான முருகப்பெருமானையே
குருவாய் ஏற்றதால், இராமலிங்கர் செந்தமிழும்
வடமொழியும் ஆகிய இருபெரும் மொழிகளையும் ஓதி உணரும்
பெரு ஞானம் கைவரப் பெற்றார்.
எனினும் உலகியல் முறைக்கேற்பக்
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரையும்,
சகோதரர் சபாபதிப் பிள்ளையையும் ஆசான்களாகப்
பெற்றார். சபாபதிப் பிள்ளையின் அன்பினும் அவர்
மனைவியாரின் அரவணைப்பிலுமே வளர்ந்தார்.
கருவிலே திருவுடையவராக அவர்
தோன்றியமையால், இளம்போதிலேயே கவி எழுதும்
பேராற்றலைப் பெற்றார். இராமலிங்கர் பல்வேறு
ஆற்றல்களின் உறைவிடமாக விளங்கினார்.
அவர் புலவராக, கவிஞராக,
சொற்பொழிவாளராக, உரைநடை எழுத்தாளராக,
நூலாசிரியராக, உரையாசிரியராக, ஞானாசிரியராக,
போதகாசிரியராக, மருத்துவராக, இவர்களுக்கெல்லாம்
மேலாகத் துறவியாக, ஞானியாக, சித்தராகக் காட்சி
தந்தார்.
செயற்கரியவற்றையே செய்த
இராமலிங்கர், உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கி வரும்
முழுமுதற் பொருள்களான கடவுள், அனைவர் உள்ளங்களிலும்
சோதி வடிவாகத் திகழ்கின்றார், அத்தகைய
அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையே உலக
உயிர்களையெல்லாம் வாழ வைக்கிறதென்றும் கண்டார்.
இவ்வுண்மையினை மனத்திற் கொண்டு,
சாதிமத வேறுபாடின்றி, எல்லா உயிர்களிடத்திலும்
இரக்கமுடையவராய் வாழும் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை
நல்கும் சீவகாருண்ய ஒழுக்கமே உலகில் உயர்ந்தது என
அறிந்து தெளிந்தார். இதனால் சமரச சன்மார்க்க
நெறியைக் கைக்கொண்டார்.
தம் நெறிதழைக்க இறைவன்
கருணைதனைப் பெற்றார். பயிர்கள் வாடுவதையே பார்க்கப்
பொறுக்காத இராமலிங்கர், பசியால் வாடும் மக்களின்
துயர் துடைக்க முன்வந்தார். வடலூரில் சன்மார்க்க
சங்கம் - சத்திய தரும சாலை - சத்திய ஞான சபை என்னும்
மூன்று அருள் நெறி காக்கும் அமைப்புகளை நிறுவினார்.
அப்பெருமான் தனிக்கொள்கையை, தனிக்கொடியை,
தனிச்சபையை, தனிமார்க்கத்தை, தனி மந்திரத்தை,
வழிபாட்டைக் கண்டார்.
பொருளை வாரி வழங்கியவர்கள்
பொருள் வள்ளல்கள்; அருளை வாரி வழங்கியோர் அருள்
வள்ளல்கள். அருள் வள்ளல்களில் ஒருவராகி அதேபொழுது,
தம் தனிப்பண்பாலும் ஒருவராகி, வள்ளல் என்ற தனிப்
பெயரையே பெற்றுத் திகழும் வெற்றிபெற்றவர் நம்
இராமலிங்கர்.
மரணமில்லாப் பெருவாழ்வு எனச்
சாகாக்கலையை உலகிற்கு உணர்த்தியவர் வள்ளலார்; அவர்
பொன் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
வள்ளலார், தோன்றிய காலம்
தொட்டே பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார்.
அப்பெருமகனார் ஓராண்டுப்
பருவத்தினராக இருந்தபோதே தில்லையம்பலநாதர்
சந்நிதித் திரைச்சீலை தானே தூக்கப்பெற்று
தரிசித்தார். ஒருமுறை திண்ணையிலிருந்து கீழே
விழுந்தபோது இறைவி வந்து காப்பாற்றினார். ஒருநாள்
பட்டினியோடு படுத்திருந்தபோது அவர் அண்ணியார் வடிவில்
இறைவி காப்பாற்றினார். இளமையில் அண்ணன்
சொற்பொழிவுகளுக்கு ஏடு படிக்கத் தொடங்கினார். ஒரு முறை
அவர் நோய்வாய்ப் பட்டமையால் தாமே சொற்பொழிவு
செய்யத் தொடங்கி நாடறிந்த பெருமகன் ஆனார்.
தண்ணீரில் விளக்கெரியச்
செய்தார். ஒரே இரவில் 1596 வரிகளை உடைய
அருட்பெருஞ்சோதி அகவலைப் பாடி முடித்தார்.
வள்ளலார் பக்தி நெறி
நின்றாலும் உலக வாழ்வில் மக்கள் சிறந்து வாழும்
பக்குவநெறியும் கண்டவர். ஏழை பணக்காரன், மேல்சாதி
கீழ்சாதி, முறைகளை வன்மையாகக் கண்டித்தவர்.
சாதி சமய வேறுபாடுகளைக் கடுமையாய்
எதிர்த்தார். மக்கள் வாழப் பயன்படும் நெறியே
நன்னெறி எனப் போற்றினார்.
இளமையில் முருகப்பெருமானைக்
கடவுளாகவும், திருஞான சம்பந்தரைக் குருவாகவும்,
திருவாசகத்தை வழிபடும் நூலாகவும் கொண்டார். பின்னர்
ஒற்றியூரில் வாழும் இறைவனின் இணையற்ற பக்தராகவும்,
பின் தில்லையம்பல நாதரின் பக்தராகவும்
விளங்கினார். முடிவில் அருட்பெருஞ்சோதி அடியவராகத்
திகழ்ந்தார்.
ஒத்தாரும் உயர்ந்தாரும்
தாழ்ந்தாரும் ஆகிய அனைவரும் ஒருமை உள்ளவராகி உலகில்
வாழ வேண்டும் என்ற பெருநோக்கோடு வள்ளலார் திருவாய்
மலர்ந்தருளிய செந்தமிழ்த் திருப்பாடல்களின்
தொகுதியே திருவருட்பா என்னும் கருவூலமாகும்.
அருளாளர்கள் பாடிய பாடல்கள்
அனைத்தும் அருட்பாக்களே! ஆனால் திரு சேர்ந்து அப்
பெயருடனேயே விளங்கும் அருட்பா, வள்ளல் பெருமான் பாடிய
பாடல்களின் தொகுதியே யாகும்.
தி்ருவருட்பா ஆறு திருமுறைப்
பகுதிகள் கொண்டு விளங்குகின்றது. 399 பதிகங்களையும் 5818
பாடல்களையும் கொண்டது. எல்லாப் பாடல்களும் இறைவனை
முன்னிறுத்திப் பாடப்பெற்றவையே. இது பக்திப்பா
உலகில் ஒரு புதுமை; தமிழ்மொழிக்கு மற்றொரு பெருமை.
ஆண்டவனை அனைவரும் நாள்தோறும்
வேண்டிப் போற்றும் நிலையில் உரைநடை வேண்டுகோளாக
அமைந்தவை, சுத்த சன்மார்க்கச் சத்தியச் சிறு
விண்ணப்பம், சுத்த சன்மார்க்கப் பெரு விண்ணப்பம்,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம், சமரச
சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பம்
என்பனவாகும்.
மனுமுறை கண்ட வாசகம், சீவகாருண்ய
ஒழுக்கம் என்பன வள்ளல் பெருமான் இயற்றிய உரைநடை
நூல்கள் ஆகும். அவர் உரையாசிரியராகவும்
பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தும் பல அரும்பணிகள்
செய்தார்.
இறைநெறியை ஆன்மநேயப் பெருநெறி
ஆக்கிய வள்ளல் பெருமான் தைப்பூச நன்னாளில் வடலூரில்
உள்ள சித்திவளாகத்தில் ஓர் அறைக்குள் சென்று கதவினை
மூடிக்கொண்டு அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு
இரண்டறக் கலந்து சோதி வடிவானார். அவர் சித்தி
அடைந்த நாள் 30-1-1874 ஆகும்.
வள்ளல் பெருமானின் கொள்கைகள்
இன்று உலகெங்கும் பரவி வருகின்றது.
ஆண்டுதோறும் வடலூரில் தைப்பூசத்
திருவிழாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்
கூடிச் சோதி வழிபாட்டில் கலந்துகொண்டு வள்ளல்
பெருமானின் அருளைப் பெறுகின்றனர்.
வள்ளல் பெருமானின்
அருள்திறத்தை, ஆன்மநேய ஒருமைப்பாட்டின் உயர்வை,
அறிந்து தெளிந்து திருவருட்பாக்களை நாளும் ஓதி நல்
வாழ்வு பெறுவோமாக.
|