திருவருட்பா

இரண்டாம் திருமுறை

முதல் தொகுதி

அணிந்துரை

தமிழ் இசைக்காவலர், பத்மபூஷண், டாக்டர்  

ராஜா சர். முத்தையா செட்டியார் 

முன்னாள் இணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழியான, தமிழ்மொழியும் அதன் சொற்களும் அனைவருக்கும் பொதுவாயினும், கையாள்பவரைப் பொறுத்து மென்மையும், வன்மையும், எழிலும், ஏற்றமும், தெளிவும், திட்பமும் பெற்று விளங்கும் தன்மையைப் பெறுகின்றன. எனவேதான் வள்ளுவர் தமிழ், இளங்கோ தமிழ், கம்பர் தமிழ் என்று நூல்களை, ஆக்கியோர்மீது அதனை ஏற்றிச் சொல்லும் நிலைமையைக் காண்கிறோம்.

இது போலவே பக்திப் பேருலகில் நால்வர் தமிழ் என்று நானிலமே போற்றும்வண்ணம், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகிய அருளரசர்கள் நால்வரும் இறைவனின் பெருமையைப் போற்றி எண்ணற்ற பாக்களை இயற்றித் தமிழகமெங்கும் பக்தி மணத்தைப் பெருக்கினார்கள்.கள்.கள்.

அவர்கள் தமிழ் கேட்டு இறைவனே பலமுறை மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். சிலமுறை மயங்கிக்கூட இருக்கிறார். எனவேதான் தூய மறைகள் பாடும் வாயை உடைய எம்பெருமான், சுந்தரரைப் பார்த்துச் ‘சொற்றமிழ் பாடுக’ என்று அன்பால் ஆணை பிறப்பித்திருக்கின்றார்.

தண்ணார் தமிழால் சைவநெறி போற்றுகின்ற அப் பெருமக்களுக்குப் பின்னர், அந் நெறி போற்ற, தத்துவமும் வித்தகமும் ஞானமும் சித்தியும் நிறைந்த, தேனினும் இனிய, தெளிந்த அமுதினும் உயர்ந்த, பாடல்களைத் தந்த பட்டினத்தடிகளும் வள்ளல் பெருமானும் தோன்றினார்கள். இந்த இருபெரும் ஞானச் சித்தர்களும் தோன்றிய இடங்கள் வேறு வேறு ஆயினும், பட்டினத்தடிகளால் திருவொற்றியூரும், வள்ளற் பெருமானால் வடலூரும் நிலைத்த பெருமைக்கு நிலைக்களன்களாக விளங்குகின்றன.

உலகத்தார் அனைவரும் ஒருமையுடன் இறைவன் திருவடிகளை வணங்குகின்ற உத்தமர்களாக வேண்டும். பிறிதொன்று எண்ணாத பேருள்ளம் கொண்டவர்களாக, அவர்கள் திகழவேண்டும் என்னும் அருள் நோக்கோடு, அருட்பிரகாச வள்ளலார் அவர்கள், திருவாய் மலர்களாக மலர்ந்தவையே, அந்த அற்புத அருள் மலர்களின் தொகுதியே, செந்தமிழ் மொழியின் பக்திச் சுரங்கமே திருவருட்பாவாகும்.ும்.

திருவருட்பா ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை 5918 ஆகும்.

பாடல் நூல்களுக்கு உரைகாண்பது என்பது அரிய, பெரிய, மிகவும் போற்றத்தக்க ஒப்பற்ற செயலாகும். பல சங்க நூல்களும் காவியங்களும் பக்திப் பெருநூல்களும் இலக்கண நூல்களும் அவற்றின் உரை நலத்தைக்கொண்டே அவற்றை எளிதில் படித்துப் பயன்பெறக் கூடியவையாக இருக்கின்றன என்பதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நல்லார் ஒருவர் உளரேல் எல்லாருக்கும் மழை பெய்வதுபோல நல்லார் ஒருவர் உள்ளத்தில் திருவருட்பாவிற்கு உரை காணவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால், அது செம்மையான முறையில் செயல் ஆயிற்று. இவ் வுலகிற்குப் பொருளும் அவ் வுலகிற்கு அருளும் இன்றியமையாதன என்று வள்ளுவப்பெருமான் வகுத்தார். ஆனால் இவ்வுலகிலேயே பொருளுடன் அருளையும் பெற்ற, புண்ணியப் பெருமகனாக விளங்குகின்ற என் இனிய நண்பர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்கள் பொன்மனத்திலேயே இந்தப் பொன்னான எண்ணம் தோன்றியது. பரம்பரையாகவே அருட்பிரகாச வள்ளல் பெருமானிடம் பேரன்புகொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் உள்ளத்தில் இந்த எண்ணம் தோன்றியதற்குக் காரணம், அந்த வள்ளல் பெருமானின் திருவருள் என்றே எண்ணுகின்றேன்.

எண்ணியவற்றை எண்ணியவண்ணமே செயலாக்கும் அன்பர் மகாலிங்கம் அவர்கள், சைவ நெறியினை உள்ளவாறு உணர்ந்து தெளிந்த திறனுடன், தமிழ்மொழியின்கண் நுட்பமும் உரைகாண்பதில் திட்பமும்கொண்டு, பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்தாந்த கலாநிதி ஒளவை, சு. துரைசாமிப்பிள்ளை அவர்களைக்கொண்டு அருட்பாவிற்கு உரைகாணச் செய்தார்கள்.

அந்த உரை தட்டெழுத்துப் பிரதியில் எட்டாயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளதாக உருவாயிற்று. அந்த உருவாக்கம் முழுமை பெற, பெருவிருப்பத்தோடு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து மகாலிங்கம் அவர்கள் அந்த முயற்சியில் முழுவெற்றி பெற்றார்கள்.

கூத்தப்பெருமான் குடிகொண்டு விளங்கும் சிதம்பரத்திற்கு அருகில் மருதூரில் பிறந்து, சற்றுத்தொலைவில் உள்ள வடலூரில் சத்திய ஞான சபையைக் கண்ட வள்ளல் பெருமானின் திருவருட்பாவிற்கு, உரிய உரை நூல், அந்தக் கூத்தப் பெருமானின் ஊர் எல்லையிலேயே விளங்கும் கல்விப் பேராலயமான, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்மூலம் வெளிவரவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அவ் விருப்பத்தை அவர்கள் என்னிடம் வெளியிட்டபோது, போற்றத்தக்க பல அரியநூல்களை வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்மூலம், உரையுடன் கூடிய திருவருட்பா நூல் வெளிவருவது மிகவும் பொருத்தமுடையது என்று எண்ணி, மிகுந்த மகிழ்ச்சியோடு அதற்கு நான் ஒப்புக் கொண்டேன், விரைவிலேயே ஒருநாள் அவர்கள் தட்டெழுத்துப் பிரதியில் உள்ள திருவருட்பா உரை முப்பது பகுதிகளையும் எடுத்துக்கொண்டு அவர்களும், அவர்கள் திருக்குமாரரும் என் இல்லத்திற்கு வந்து அவற்றை என்னிடம் தந்ததை, வாழ்நாளில் நான் பெற்ற பரிசுகளையெல்லாம்விட மிகப்பெரிய பரிசாகக் கருதுகிறேன்.

பல்வேறு நூல்களைப் பதிப்பித்தும், உரை கண்டும், தமிழ் இலக்கிய உலகிற்கு ஓர் ஒளிவிளக்காக விளங்கியவர்கள் தமிழ்த் தாத்தா என்று உலகம் புகழும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். அந்தத் தமிழ்ப் பேரறிஞர் அவர்கள் 1920ஆம் ஆண்டு (தமிழ்க் கல்லூரிக்கு) முதல்வராக நியமித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மகிழ்ந்தது. என்றுமே தமிழ் அறிஞர்களைத் தேடிப் போற்றிப் பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் பணிகளைப் பயன்படுத்திக் கொண்டது போலவே, பல ஒப்பற்ற நூல்களையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மிகச் செம்மையான முறையில் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு வருகின்றது.

அனைத்துப் பாட வேறுபாடுகளோடும் விளக்க உரைகளோடும் ஈடு இணையற்ற பதிப்பாக பதினாறு பகுதிகளாக வெளிவந்த கம்பராமாயணத்தின் செம்பதிப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாவில் வெளியிடப் பெற்றது.

அப் பதிப்புப் போலவே பத்துப்பகுதிகளாக மிகச்சிறந்த முறையில் வெளிவர இருக்கும் மூலமும் உரையும் கொண்ட திரு அருட்பாவின் முதல் தொகுதி (முதல் திருமுறை), இந்தியப் பெருநாட்டின் ஜனாதிபதியாக இருந்த மேன்மைதங்கிய சஞ்சீவி ரெட்டி அவர்கள் தலைமைதாங்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்த பொன்விழாவில் வெளியிடப் பெற்றது. அப்பொழுது துணைவேந்தராக விளங்கிய டாக்டர் ஜஸ்டிஸ் பி. எஸ். சோமசுந்தரம் அவர்கள், திருவருட்பா நூல் வெளி வருவதில் பேரார்வம் காட்டியதுடன், முதல் தொகுதி பொன் விழாவில் வருவதற்கான தக்க ஏற்பாடுகளையும் செய்தார்கள். அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிந்தனைத் திறத்தாலும், செயல்வன்மையாலும், தெளிந்த உயர்ந்த நிர்வாக ஆற்றலாலும், எந்தப் பொறுப்பை ஏற்றாலும் அந்தப் பொறுப்பிற்கும் அந்த அமைப்பிற்கும் நிலைத்த பெருமையினைச் சேர்க்கும் நம் மதிப்பிற்குரிய பேராசிரியர் சை. வே. சிட்டிபாபு அவர்கள். இப்பொழுது துணை வேந்தராக விளங்குகிறார்கள். அவர்கள் திருவருட்பாவின் பகுதிகள் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்பதில் காட்டிய ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அளவிட முடியாதன. சென்ற ஆண்டு நிறுவியோர் நினைவு விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்களிடம் திருவருட்பா வெளியீட்டு முயற்சிக்குத் தமிழக அரசு உதவவேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வெளியிட்டார்கள்.

அதனை அன்புடன் கேட்ட அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சர், எம்.ஜி.ஆர். அவர்களின் ஒப்புதலோடு, திருவருட்பா வெளியீட்டிற்கு உதவி செய்வதாக அந்த விழாவிலேயே தெரிவித்தார்கள். அங்கு தெரிவித்தவண்ணமே அறநிலையத்துறைமூலம் வட்டி இல்லாக் கடனாக நான்கு லட்ச ருபாய்கள் வழங்கித் திருவருட்பாப் பகுதிகள் சிறந்த முறையில் நூல்களாக வெளிவர உதவினார்கள். இந்த நற்பணிக்கு உதவிய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு இராம. விரப்பன் அவர்களுக்கும், நற்செயல்கள் அனைத்திற்கும் துணை நின்று நாளும் நல்லன புரியும் தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு கொடுத்த உதவித் தொகையைக்கொண்டு, திருவருட்பா உரைப் பகுதிகள் மிக அழகாகவும் அருமையாகவும் பெருமை கொள்ளத் தக்க வகையிலும் தொடர்ந்து வெளிவரத் திட்டமிட்டுச் செயலாற்றிப் பெருவெற்றி கண்டுள்ள துணைவேந்தர் பேராசிரியர் சை. வே. சிட்டிபாபு அவர்களுக்கும் என் அன்புகலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவருட்பா உரையுடன் கூடிய பகுதிகளை அனைத்துத் தமிழ் மக்களும் படித்து அருட்பெரும் சோதியான வள்ளல் பெருமானின் அருளைப் பெறவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.

மு. அ. முத்தையா செட்டியார்