இரண்டாம் திருமுறை
முதல் தொகுதி
முன்னுரை
பேராசிரியர் சை.
வே. சிட்டிபாபு
துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
உலகின் கண், வேறெந்த நாட்டையும்விடப், பாரதத் திருநாட்டில்தான் அறிவொளி பரப்பி,
அகஒளி பெருக்கிய மெய்ஞ்ஞானிகள் பலர் தோன்றியுள்ளனர். இப் பெருநிலப்பரப்பிலும்
தமிழ்த்திருநாடே மெய்ஞ்ஞானிகள் பலரைத் தோற்றுவித்த ஞானபூமியாகத் திகழ்கிறது; புண்ணிய
பூமியாகப் பொலிகின்றது. அதே ஞான பரம்பரையில், அருட்சோதியாய், ஆனந்தப் பெருக்காய்,
வான்தந்த அமுதமாய், வளர் வேத நாதரின் அருள்திருச் செல்வராய் அவதரித்தவர்தான்
இராமலிங்க வள்ளலார் அவர்கள்.
பொருளை
வழங்குவதால் மட்டுமல்லாமல், அருளைக் குறைவற வழங்குவதாலும் வள்ளலாக முடியுமென்பதனை உலகிற்கே
நிரூபித்த திருமகனார் இராமலிங்க சுவாமிகளே ஆவார்கள். நம் நாட்டில் வள்ளல்களாக
வாழ்ந்தோர் பலராயினும் எண்ணற்ற அருட்பணிகளை இடையீடின்றிச் செய்து வந்ததால்
‘வள்ளலார்’ என்ற பெயர் அவருக்கே சொந்தமாயிற்று.
வள்ளல்
பெருமான் தாம் ஒருவராக நின்று செய்த செயற்கரும் செயல்கள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கன;
ஏற்றியும் போற்றியும் வணங்கத்தக்கன. சுருங்கச் சொன்னால், ஆன்மீக உலகின் திருப்பு
முனையாக அவதரித்தவர் அவர்.
புதுமை
உலகின் திருப்புமுனையாகத் தோன்றிய பாரதியார், வள்ளல் பெருமானை ஆன்மீக உலகின்
விடிவெள்ளியாகவே கருதியுள்ளார்.
|
“இந்துஸ்தானத்திற்குள் தமிழ்நாடு
முதலாவதாகக் கண் விழித்தது; இராமலிங்க
சுவாமிகள்
போன்ற மகான்கள்
தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்கு
ஆதிகர்த்தர்களாக விளங்கினார்கள்” |
என்று,
ஆன்மீக உலகின் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய முதன் மாமுனிவராக வள்ளல்பெருமானைப் பற்றிப்
பரவசத்தோடு பாரதியார் கூறியுள்ளார். வள்ளல் பெருமான் இறைவனுக்குப் பிள்ளையாக
இருந்தாலும், மக்களுக்குத் தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் எல்லாப் பொருளுமாய்
விளங்கினார்.
வள்ளலாரைப் பலரும் சமயவாதியாக மட்டுமே கருதுகின்றனர். உலக ஒருமைப்பாட்டைப்பற்றிப்
பேசுகின்ற இன்றைய அறிஞர்களுக்கும், ஞானிகளுக்கும், தலைவர்களுக்கும் முதன்மையானவர் வள்ளல்
பெருமானே ஆவார்.
இறைவழிபாட்டின் நோக்கம் ஒருமைப்பாடேதவிர, சாதி சமய வேறுபாடுகளை வளர்ப்பதற்கில்லை
என்பதை மிகவும் வெளிப்படையாகவும், வன்மையாகவும், உண்மையாகவும் கண்டித்தவர் வள்ளல்
பெருமான்.
|
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச்
சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே
அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே. |
பேதங்களைச் சாடுகின்ற பல பாடல்கள் வள்ளலாரின் திருவாய் மலர்களாக வெளிப்பட்டு,
ஒளிச்சுடர்களாகத் திகழ்கின்றன.
உலகில்
தோன்றிய ஞானிகளும், அறிஞர்களும் உயர்ந்த தத்துவங்கள் பலவற்றை வழங்கி உள்ளார்கள்.
ஆனால், ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகிற்கு வழங்கியவர் வள்ளல்
பெருமானே ஆவார். சுத்த சமரச சன்மார்க்க லட்சியத்தை உள்ளடக்கிய ஆன்மநேய ஒருமைப்பாடு
வளர்ந்தால், உலகில் துன்பங்கள் அனைத்தும் படிப்படியாய்க் குறையும்; பின் மறையும் அன்றோ!
போரும்,
கொலையும், பூசலும் ஒழியும்; உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு பெருகும்;
ஒன்றி வாழ வழி பிறக்கும். இவற்றிற்கெல்லாம் வள்ளலார் கண்ட பெருநெறியே, ஒரு நெறியாக,
ஒப்பற்ற நெறியாக விளங்குகின்றது.
|
சீவர்கள் எல்லாம் ஒருதன்மையாகிய இயற்கை உண்மை
ஏகதேசங்களாய் சர்வ சக்தி
உடைய
கடவுளால் சிருஷ்டிக்கப்
பட்டபடியால் ஓருரிமை உள்ள
சகோதரர்களே யாவார் |
என்று,
உயிர்த்தொகுதிகளின் சகோதர ஒருமைப்பாடு இயற்கையாகவே அமைந்திருத்தலை வள்ளல் பெருமான்
தெளிவாகக் கூறியுள்ளார்.
|
கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக்
காதலித்
தொருமையால் கலந்தே
உள்ளவாறு
இந்த உலகெலாம் களிப்புற்று
ஓங்குதல்
என்றுவந்து உறுமோ
வள்ளலே
அதுகண்டு அடியனேன் உள்ளம்
மகிழ்தல்
என்றோ! |
என்ற
பாடலால், உலக ஒருமைப்பாட்டைக் காண அந்தப் பெருந்தகையின் உள்ளம் எந்த அளவிற்கு
ஏங்கிற்று என்பது புலனாகும்.
மனி்த
இனத்தைத் தாண்டி அனைத்து உயிர்த்தொகுதிகளிடத்தும் நேயம் கொண்டவர் வள்ளல் பெருமான்.
உணர்வற்ற அஃறிணைப் பொருள்களின் துன்பத்தைக்கூட உணர்ந்து உருகிய அந்தப் பெருமானது
பேருள்ளம், பசிக்கொடுமையால், பட்டினியால் வாடிய ஏழைகளைக் கண்டு எவ்வளவு துயருற்றிருக்கும்!
|
பட்டினி
யுற்றார் பசித்தனர் களையால்
பரிதவிக்
கின்றன ரென்றே
ஒட்டிய
பிறரால் கேட்டபோ தெல்லாம்
உள்ளம்
பகீரென நடுக்குற்றேன். |
மேற்கண்ட வரிகளால் வள்ளல் பெருமான் பசிக்கொடுமையை உள்ளவாறு அறிந்த தன்மையைக்
காண்கிறோம். வள்ளல் பெருமான் சமய ஞானியாக மட்டுமல்லாமல், சமுதாயத்தைத் திருத்துகின்ற
அறிஞராகவும் விளங்கியதுதான் அவரது தனித்தன்மையாகும்.
பயிரை
வளர்க்கின்ற நதிகளை எல்லாம் பக்தி வளர்க்கவும் பயன்படுத்திய பேருள்ளம் நம் முன்னோர்
உள்ளம். உணவு தருவதோடு உண்ணும் நீராகவும் நின்று காக்கும் தாய்களான நதிகளைச் சேய்களான
அவர்கள் கங்கை, காவிரி, யமுனை என்று பெண் பெயரிட்டுத் தெய்வங்களாக்கி
மகிழ்ந்தார்கள். அந்த வழியில் வந்த வள்ளல் பெருமானுக்கும் தாய்க்குலத்தைப்
போற்றுகின்ற பேருள்ளம் முழுமையாக இருந்தது.
|
பெண்களுக்குப்
பேதமற்று அபேதமாய்ப்
படிப்பு
முதலியவற்றைச் சொல்லிக்
கொடுக்க
வேண்டும் |
என்று
அப்பெருமான் அன்றே பெண் கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார்.
தெய்வ
நெறியையும், உலக ஒருமைப்பாட்டு நெறியையும், தமது பாடல்கள் வாயிலாகவும் உரைநடை வழியாகவும்
உணர்த்தி, அருட் பெருஞ்சோதியை ஏற்றி வைத்தவர் வள்ளல் பெருமான். அதன்மூலம் தனிப்பெரும்
கருணையை நிலைநாட்ட முயன்றவர் அந்த வடலூர்வள்ளல்.
அவருடைய
அரிய, ஈடு இணையில்லாத, அற்புதமான கருத்துக்கள் உலகெங்கும் பரவுமானால், மனித இனத்தின்
மறுமலர்ச்சியை, எழுச்சியை, இனிய வாழ்வை, விரைவில் காணலாம்.
இந்த
உயர்ந்த எண்ணத்தால் வள்ளல் பெருமானின் புகழையும் அவரது அரிய கருத்துக்களையும் நாளும்
பரப்புவதையே நற்றொண்டாகக் கொண்டவர் அருட்பெருஞ்செல்வரான நா. மகாலிங்கம் அவர்கள்.
அப் பெருமகனாரைத் தலைவராகக்கொண்ட இராமலிங்கர் பணிமன்றத்தின் மூலம் வள்ளல்
பெருமானின் நூல்கள் எல்லாம் மிகச்சிறந்த முறையில் பதிப்பிக்கப் பெற்று வெளிவந்துள்ளன.
வள்ளல்
பெருமான் கண்ட, ஆறு திருமுறைகளைக் கொண்ட தீந் தமிழ்ப் பாடல்கள் இணைந்த திருவருட்பா
உரையுடன் வருவதற்கும் அந்த அறச்செல்வரே துணை நின்றார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேரறிஞரும், உரை வேந்தர் என்று தமிழுலகம் புகழும்
பேராசிரியருமான ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களைக் கொண்டு, பெரும் நிதியும் செலவு
செய்து, திருவருட்பா முழுவதற்கும் வரலாற்று முறைப்படி விரிவுரை எழுதச் செய்தார்கள்.
திருவருட்பா உரைநூலை வெளியிட அண்ணாமலைப் பல்கலைக் கழகமே ஏற்றது என்று கருதிய திரு நா.
மகாலிங்கம் அவர்கள், திருவருட்பா உரைப்பகுதிகள் அனைத்தையும் பல்கலைக்கழக இணைவேந்தர்,
வள்ளல் இராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அரசர்
முத்தையவேள் அவர்களும் பெருவிருப்பத்தோடு வெளியிட உடன்பட்டு அப்பகுதிகளைப்
பெற்றுக்கொண்டார்கள். திருவருட்பாவுக்கு உரைகாணச் செய்த நா. மகாலிங்கம் அவர்களுக்கு என்
ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருவருட்பா முதல்திருமுறை பல்கலைக்கழகத்துப் பொன்விழாவில் வெளியிடப் பெற்றது.
திருவருட்பாவின் மற்றத் திருமுறைகளும் நூல்களாக வெளிவர வேண்டும் என்ற ஆர்வம் இணைவேந்தர்
முத்தையவேள் அவர்களுக்கும், எனக்கும் நாளும் பெருகி வந்தது. இந்த நிலையில், சென்ற ஆண்டு
‘நிறுவியோர் நினைவு விழா’விற்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த,
அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்களிடம் விழா மேடையில் அடுக்கி
வைக்கப் பெற்றிருந்த (தட்டெழுத்தில் இருந்த) உரையுடன் கூடிய திருவருட்பாவின் பல
பகுதிகளையும் காட்டினேன். அவற்றை வெளியிடத் தமிழக அரசு உதவ வேண்டும் என்ற அன்புக்
கோரிக்கையையும் தெரிவித்தேன்.
அதைக்
கேட்டு ஆர்வமும் மகிழ்ச்சியும் கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், தமிழக அரசின்
ஒப்புதலோடு திருவருட்பா நூலை வெளியிடத் தக்க உதவி செய்வதாக அந்த விழாவிலேயே உறுதி
அளித்தார்கள். உறுதி அளித்த வண்ணமே திருவருட்பா உரைநூல் பகுதிகளைப் பதிப்பிப்பதற்கு,
தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை மூலம் வட்டியில்லாத கடனாக நான்கு லட்ச ரூபாய்களை வழங்கிப்
பதிப்புப் பணி தொடங்க வழிவகுத்தார்கள். இந்த நற்பணிக்கு உதவிய அறநிலையத் துறை
அமைச்சர் மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் என் மனப்பூர்வமான
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வள்ளலாரின் பாடல்களை உணர்ந்து படித்து, தெளிந்து, சிறந்த வாழ்வினைப் பெற உரையுடன் கூடிய
இந்நூல் பெருந்துணை புரியும் என நம்புகிறேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்ற கல்விப் பேராலயத்திலிருந்து அருள்திரு மணியின்
உயர்ஒலிகள்போல உரையுடன் கூடிய திருவருட்பா பகுதிகள் தொடர்ந்து வெளிவருகின்றன.
தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், கடல்கடந்தும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும்
அப்பகுதிகளைத் தொடர்ந்து படித்து வடலூர் வள்ளல் பெருமானின் அருளை முழுமையாகப் பெறவேண்டுமென
மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
சை. வே. சிட்டிபாபு
|