முகப்பு தொடக்கம்

மக்கள் உடலாலும் வாழ்ந்து உள்ளத்தாலும் வாழ்தல் வேண்டும்; ஆகவே மக்கள் உடலிற்கு வேண்டிய உணவும் உள்ளத்திற்கு வேண்டிய கடவுளும் என இருவகைப் பொருள்களையும் பெறவேண்டியவராகின்றார். உடம்பிற்கு உணவு அமைதி தருமாறுபோல மக்கள் உள்ளத்திற்கு அமைதி தருவது கடவுளேயாகும். மக்கள் உள்ளத்திற் குடிகொண்டிருக்கின்ற கடவுளுணர்ச்சி கடவுட்காட்சி அவ்வுள்ளத்தில் முழுமை பெறுந்துணையும் மக்களைத் தூண்டியவண்ணமிருக்கிறது.

அந்தக் கடவுளைக் காணவேண்டும் என்று அவரை இடையறாது அவ்வுணர்ச்சி தூண்டுவதே அவர் இந்நிலவுலக வாழ்க்கையில் அமைதி காணமாட்டாமைக்குக் காரணம் ஆகும். அவருடைய அறிவு வளருந்தோறும் இவ்வுணர்ச்சியும் கூடவே வளர்கின்றது. ஆதலால் அவ்வுணர்ச்சி மேலும் ஆற்றலுடையதாகி அவரை எந்த நிலையினும் அமைதிகொள்ளவிடாமல் மேலும் மேலும் தூண்டிய வண்ணமே இருக்கின்றது.

மிகப் பழைய காலத்திலேயே மெய்க்காட்சியாளர்கள் அந்தக் கடவுளைப்பற்றிப் பெரிதும் ஆராய்ந்து அதன் இயல்பு இத்தகையது என்றும், அதனை அடைந்தாலன்றி மனிதன் கவலையின்றி அமைதிகொள்ளவியலாது என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

"தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 மனக்கவலை மாற்ற லரிது"

என்பது மெய்க்காட்சியாளருள் தலைசிறந்த நந்தெய்வப் புலவர் திருவள்ளுவனாரின் பொன்மொழியாகும். மேலும், திருவள்ளுவனார் மனிதன் உள்ளத்தே சிறப்பாகத் தோன்றியிருக்கின்ற அக்கடவுளுணர்ச்சிக்குப் பொருளாக விருக்கின்ற அக்கடவுளை அவன் கண்டு கோடற்பொருட்டே ஏனைய எந்தப் பிறப்பிற்கும் அமையாத மொழி அல்லது கல்வி என்னும் ஒரு கருவியும் அவனுக்குச் சிறப்பாக அமைந்துளது. ஆகவே, மனிதன் கடவுளைக் கண்டடைதற்குக் கருவியாகிய கல்வியை அவன் பெரிதும் முயன்று பெருக்கிக் கொள்ளக்கடவன். கல்வி இந்நிலவுலக வாழ்க்கைக்கும் மிக மிக இன்றியமையாததே. ஆயினும் கற்றவனொருவன் கடவுள் நெறி நின்றொழுகானாயின் அவன் கற்றதனாற் சிறிதும் பயனில்லை என்றே நம்மனோர்க்குச் செவியறிவுறுத்துகின்றார். அவ்வறிவுரையே,

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅ ரெனின்"

(கடவுள் வா. 2)

எனவரும் பொருளுரையாகும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்