புராணங்களும் கடவுளும் எங்கிருந்தோ வந்து மக்கள் உள்ளத்திற் குடிகொண்டுவிட்ட அக்கடவுளுணர்ச்சிக்குப் பொருளான அந்தக் கடவுளைக் காண்டற் பொருட்டு அம்மக்களினம் தோன்றிய காலந் தொடங்கி இற்றை நாள்காறும் செய்திருக்கின்ற செயல்கள் தாம் எத்துணை! எத்துணை! அவர்கள் எடுத்திருக்கின்ற திருக்கோயில்கள்தாம் எத்துணை! எத்துணை! எழுதியுள்ள நூல்கள் எத்துணை! எத்துணை! அரியணையையும் செங்கோலையும் கோமுடியையும் எறிந்துவிட்டு வளநாட்டையுந் துறந்து அக்காணொணாத கடவுளைத் தேடிக் காட்டகம்புக்க காவலர் தாம் எத்தனைபேர்! இவ்வாறு வரலாறறியாத காலத்திலிருந்தே மக்கட் குலத்தை ஆட்டி அலைத்து வருகின்ற அவ்வுணர்ச்சிக்குப் பொருளாகின்ற காண்டற்கும் கருதுதற்கும் ஒண்ணாத அந்தக் கடவுளையே மக்கள் முன்னிலையில் கொணர்ந்து காட்டுகின்ற ஒப்பற்ற தெய்வக் கருவிகளே நம் புராணங்கள் என்றுணர்தல் வேண்டும். இதோ திருநாவுக்கரசர் ஓதுமொரு திருத்தாண்டகத்தை நோக்குமின்! | "முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் | | மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் | | பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் | | பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் | | அன்னை யையும் அத்தனையும் அன்றே நீத்தாள் | | அகன்றா ளகலிடத்தார் ஆசாரத்தைத் | | தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் | | தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" |
என்பது அப்பெரியார் அருண்மொழி. இதன்கண் திருநாவுக்கரசர் நங்கையெனப் பெண்பாலாகக் கூறியிருப்பது மக்கள் உயிரையே யாம் இந்த மக்கள் அக்கடவுளுடைய பெயரை எப்பொழுது கேள்வியுற்றனர்? யார் முதன் முதலாகக் கடவுளைக் கண்டு வந்து மக்களுக்குக் கூறினர்? இச்செய்தி யாருக்குந் தெரியாது. உயிர்கள் புல்லாகிப் பூடாகி இன்னோரன்ன எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்து மக்கட் பிறப்பெய்துங்காறும் கடவுளை நினைத்து மறிய மாட்டா; மக்கட் பிறப்பெய்திய பின்னரே கடவுளின் திருப்பெயரை அவைகள் கேள்விப்படுகின்றன. மக்கட் பிறப்பிற்கே அஃதியற்கை. ஆதலால் அப்பிறப்பெய்தும் பேறுபெற்றோரெல்லாம் முதலில் அவன் பெயரையே கேள்வியுறுகின்றனர். எப்படியோ கடவுளின் பெயரைக் கேட்டாயிற்று; அவனை யின்றியமையாது தன்னுயிரென்றும் உணர்கின்றாள் அவ்வுயிர் நங்கை. அந்நங்கை இனி அவனைக் காணாமல் ஒரு நொடிப் பொழுதும் அமைதி கொள்ள |