முகப்பு தொடக்கம்

கில்லாள். கடவுள் என்கின்ற அந்தத் தலைவன்எந்நிறத்தான்? எவ்வளவு உயரமுடையான்? என்று அவனுடைய அடையாளங்களைக் கேட்டறிய அவள் அவாவுகின்றாள். யாரிடத்தில் கேட்பது? அப்பொழுது அவளுக்கு உசா அத்துணைத் தோழியாகப் புராண நங்கை அவளெதிரே வருகின்றாள். அவளிடத்தேதான் உயிர் நங்கை அத்தலைவனைப்பற்றி வினவித் தெரிந்துகொள்ளவேண்டும். இவை தெரிந்த பின்னர் அவன் எங்கிருக்கின்றான்? என்றும் வினவுகின்றனள். புராண நங்கைக்கு மட்டுமே அவனைப்பற்றிய செய்தியனைத்தும் நன்கு தெரியுமாம். அவன் - மிக அண்மையிலே தான் - ஆரூரிலே தான் - இருக்கின்றான் என்று அவனிருக்குமிடமும் அறிவுறுத்திவிட்டாள்.

இத்துணையும் கேள்வியுற்ற பின்னரேனும் அவள் அமைதி யுற்றனளா? அதுதான் இல்லை. இப்பொழுது உயிர்நங்கை அவனைக் காணவேண்டும் என்னும் பித்துத் தலைக்கேறியவளாகி விட்டாள். இனி அவனைக் காணாமல் அரைநொடியும் அவள் அமைதியுறாள். தன்னையீன்ற அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள். அகலிடத்தார் ஆசாரத்தைச் சிறிதும் மதித்திலள். அன்றே அவற்றைக் கைநெகிழவிட்டு அகன்றாள். தன்னையே மறந்துவிட்டாள்; தன் பெயர்தானும் இன்னதென் றறியாளாயினள். எத்தனை பேரார்வம் இவ்வுயிர் நங்கைக்கு? ஓடினள் அந்த ஆரூரிலேயே அந்தத் தலைவனைக் கண்டு அவன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டாள் என்பது இறைபணி நிற்கும் அப்பெரியார் கருத்தாகும்.

இனி, மூலமலத்தால் தனக்கியல்பான அறிவும் இன்பமும் செயலும் மறையுண்டு கிடக்கும் உயிரை இறைவன்றனக்கியல்பான அருளுடைமை காரணமாகப் பிறப்பின்பாற் படுத்துவான் என்றும் அவற்றிற்கு அசுத்த மாயையினின்றும் உடலும் உட்கருவிகளும் உலகமும் நுகர்ச்சிப் பொருள்களும் படைத்துக் கொடுத்து ஒன்றறி யுலகமுதல் ஆறறிவுலகம் ஈறாகவுள்ள உலகங்களின் வழியே நெடியதோர் யாத்திரையும் செய்விக்கின்றான் என்றும்; இந்த யாத்திரையின் பயன் அவற்றின் மலநீக்கமே என்றும் இறுதியிலே அவற்றிற்கு அம் முழுமுதல்வன் இன்பப் பிழம்பாகிய தன்னையே பரிசாக வழங்கிப் பின்னர் என்றும் அழியாத அப் பேரின்பத்திலே நிலைபெறுமாறு செய்கின்றனன் என்றும் தத்துவ நூலோர் கூறுவர். இவ்வருட்செயலெல்லாம் அவ்வுயிர்களின் காட்சிக்கும் கருத்திற்கும் அப்பால் நின்றே செய்வன் இறைவன்; இக்காரணத்தால் உயிர்கள் தமது பொறி புலன்களுக்கு அப்பாலான அவ்விறைவனை எஞ்ஞான்றும் காணவியலாது என்றும் கூறுவர் அத் தத்துவ நூலோர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்