முகப்பு தொடக்கம்

கச்சியப்ப முனிவர் மாதவச் சிவஞானயோகியாருடைய மாணவருட் டலைசிறந்த மாணவர் ஆவர் என்று வரலாறு கூறுகின்றது. மாதவச் சிவஞானயோகியாரின் சிறப்பினை உணராதவர் தமிழறியா தவரேயாவர். வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டுணர்ந்த பேரறிவுக் கடலாவார். அச் சிவஞானயோகியார். அவரை ஆசிரியராகப் பெறுதற்கு இக் கச்சியப்பமுனிவர் தவம் பல செய்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. அங்ஙனமே இக் கச்சியப்ப முனிவரைத் தம் மாணாக்கராகப் பெற்றமைக்கும் அச்சிவஞானமுனிவர் மாதவம் செய்திருத்தல் வேண்டும் என்பதும் மிகையன்று.

கச்சியப்ப முனிவரும் கல்வியிற் பெரியர்; புலமையும் உடையர். மாதவச் சிவஞானமுனிவரும் கல்வியிற் பெரியர்; புலமையும் உடையர். இந்த மாணவரையும் ஆசிரியரையும்போல அமைந்த மாணவரையும் ஆசிரியரையும் யாம் வேறெவ்விடத்தும் கண்டிலேம்.

கச்சியப்ப முனிவர் தாம் பிறந்த திருவூராகிய திருத்தணிகையில் மலைமிசை எழுந்தருளிய செந்தமிழ்க் கடவுளாகிய செவ்வேளிடத்து அளவிலாப் பேரன்புடையவராவார். அவ்வன்பு காரணமாக அம்முருகப் பெருமானுக்குத் தாமே புனைந்து சூட்டிய தீந்தமிழ்ச் சொன்மாலைகள் திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதியும் திருத்தணிகையாற்றுப்படையும் ஆகும். இத்தணிகைப் புராணமோ அம்முருகப் பெருமான் அத்திருத்தணிகையிலே புதுமணம் புணர்ந்த வள்ளிநாய்ச்சியாரோடு உவந்தபோதெல்லாம் புகுந்து விளையாடுதற்கென அப்புலவர் பெருமான் அமைத்துக் கொடுத்ததொரு செந்தமிழ்ப் பூம்பொழிலே என்னலாம்.

இனி யாம் இங்ஙனம் இத்தணிகைப் புராணம் என்னும் முருகு மணக்கும் தண்டமிழ்ப் பூம்பொழிலின் புறம் புறமே திரியாமல் அக்கச்சியப்ப முனிவரின் திருவடிச் சுவடுபற்றி உட்புகுந்தும் அதன் அழகை - அது தரும் சுவையை - அதன் ஓக்கத்தை - அதன் பரப்பினை அகக்கண்ணாற் கண்டு களிப்போமாக.

திருத்தணிகைமலை நம் செந்தமிழ் நாட்டில் தொண்டை நாட்டின்கண்ணது. ஒரு நாட்டின் சிறப்பு அது நீர்வளம் நிலவளம் செந்நெல்வள முதலியவற்றை நிரம்பப்பெற்றிருப்பதால் மட்டும் உண்டாவதொன்றன்று. இந்த வளங்கள் குறைந்திருந்தாலும் குற்றமில்லை. ஆன்றவிந்த சான்றோர் பலர் தன்பால் வாழுகின்ற பேறே வாய்மையாக ஒரு நாட்டிற்குத் தலைசிறந்த சிறப்பாகும் என்பது சங்ககாலத்துப் புலவர்கள் கொண்டிருந்த கொள்கையாகும். இந்தத் தனிப்பெருஞ் சிறப்பை நந்தமிழகத்திலே இத் தொண்டை நாடே பெற்றிருக்கின்றது. பழந்தமிழ்ச் சான்றோர்,

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்