அக்கம்பனிடத்தே பன்முறை கண்டு கழிபேருவகையுங் கொண்டிருப்பர். ஒருபுலவன் தனக்கு முற்பட்ட புலவனுடைய சொல்லையும் பொருளையும் கண்டின்புறும்போது அவை இவனுடையன வாகவே ஆகிவிடுகின்றன. இங்ஙனமாவது இவனுக்குப் பெருமை தருவதுமாகும். இக்காரணத்தால் மிகப் பழைய காலத்துப் புலவர் கருத்துக்கள் புதுமையாக்கப் பெற்றுப் பல்வேறிடத்தினு நின்று பிற்காலத்தவர்க்கு ஆக்கமளிக்கின்றன. கச்சியப்ப முனிவருடைய இத் தணிகைப்புராணத்தின்கண் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட, தொல்காப்பியர் முதலாக அவரோடொருகாலத்தவராகிய சிவஞான முனிவர் ஈறாக வுள்ள புலவர் பெருமக்கள் கண்ட கருத்துக்கள் சாலப்பல இடம் பெற்றுப் புதுமையோடு மிளிர்கின்றன. அங்ஙனம் பழைமை இடம் பெற்றுப் புதுமை பெற்று மிளிர்வதனாலேதான் யாம் கச்சியப்ப முனிவரையும் அவர் அருளிச் செய்த நூல்களையும் தலையாலே வணங்கித் தொழுகின்றோம். இப்பழைய புலவர்களின் கருத்துக்களினூடே தான் இக் கச்சியப்ப முனிவர் தமக்கேயுரிய தனிப்பெருஞ் சிறப்போடு திகழ்கின்றனர். இனி, இக் கச்சியப்ப முனிவர்க்கு ஏற்றங்கூறக் கருதி "ஆசிரியர் கச்சியப்ப முனிவர் கம்பரைப் புகழ்தல் பொறாதாராகிக் கம்பருடைய ஆறு செய்யுளிலே நூறு குற்றங்காட்டினார். அது கண்டு கம்பரைப் புகழ்ந்த அந்த வம்பர் வாயடங்கி முனிவர்க்குத் திறை செலுத்தினார்," என்பதுபடக் கச்சியப்பர் நூலில் முன்னுரை ஒன்றில் வரைந்திருக்கக் கண்டு யான் நெஞ்சு துணுக்குற்றேன். இங்ஙனம் கூறியவர் யாவரேயாயினும் அவர் கம்பரையும் அறியார்; தாம் புகழப்போந்த கச்சியப்பரையும் அறியார் என்பது தேற்றம். உண்மையான புலவர் தம்மெதிரே அறியாமையால் பிறர்வாய் தந்தன கூறியபொழுதும் வாய்வாளாதிருப்பதன்றி அவர்க்குக் குற்றங் கூறுவாரல்லர். அங்ஙனமிருக்கக் கச்சியப்பர் கம்பரின் ஆறு செய்யுளில் நூறு குற்றம் காட்டினார் என்பது வெறுங் கட்டுக்கதையேயன்றி வாய்மையாகா தென்பது என் கருத்தாகும். மேலும், இங்ஙனம் கூறுவது குளிக்கப்போய்ச் சேறுபூசிக் கொள்வது போலக் கச்சியப்பரைப் புகழப்போய் அவரையே பழிப்பதாவதனையும் அறியாமலே இவ்வாறு கூறியவர் கூறியிருத்தலும் உணர்க. இவ்வாறு பேரிசைப் புலவரை அழுக்காறுடையராகக் காட்டுகின்ற இந்தப் பொய்க்கதை இவரோடும் அமைய வில்லை. இவர் ஆசிரியராகிய சிவஞான முனிவருக்கும் இங்ஙனம் ஒரு வரலாறு கூறப்பட்டுளது.அஃதாவது :- |