முகப்பு தொடக்கம்

சிவஞான முனிவர் கம்பராமாயணத்திற் காணப்படுகின்ற முதற் செய்யுள் முழுவதுமே குற்றம் என்று கூறிப் பல சங்கைகளைக் கூறினர் அவற்றிற்கு மாற்றார் மாற்றந்தரமாட்டாது விழிக்கப் பின்னர், அடிகளே அவற்றிற்கு மாற்றமும் கூறினராம். இச்சங்கையும் உத்தரமும் கம்பராமாயண முதற் செய்யுட் சங்கோத்தரவிருத்தி என்னும் நூலாக நின்று நிலவுகிறது என்பதாம்.

இச் சங்கோத்தரவிருத்தி சிவஞான முனிவரையே பேதைமைப் படுத்திவிடுகின்றது. கம்பராமாயணத்திலுள்ள "நாடிய பொருள் கைகூடும்" என்னும் செய்யுள் கம்பர்பாடிய செய்யுளுமன்று. பிறர் செய்யுளாயினும் கம்பராமாயணத்தே முன்னிற்ப தன்றோ எனினும், தாம் காட்டிய குற்றமே மீண்டும் குற்றமாகாமற் போவதெங்ஙனம்? இதனால் இச் சங்கோத்தர விருத்தி என்பது யாரோ ஒருவராற் செய்யப்பட்ட மருணூல் எனவே உண்மையாதலுணர்க. இத்திருவிளையாடலைச் சிவஞான முனிவர் செய்திருப்பர் என்று நினைத்துப் பார்க்கவும் யாம் கூசுகின்றோம்.

இனி, இடைப்பிறவரலாக ஈண்டுக் கூறியவை நிற்க, யாம் கச்சியப்பர் நூலின்பாற் புகுவோம்.

தொண்டைநாடு நீர்வளமிக்க நாடன்று. அந்நாட்டிலொழுகும் பாலியாறு உட்பட எல்லாயாறுகளுமே எப்பொழுதேனும் புனல் பெருகுவதல்லால் யாண்டுதோறும் காவிரிபோன்று புனல் நிரம்பி யொழுகமாட்டா. பாலியாற்று நிரம்ப வெள்ளம் புரண்டோடுதலை ஆறுமுறை ஒருவர் காணல் வேண்டு மெனின் அவர் நூறாண்டு வாழ்பவராகவு மிருத்தல் வேண்டும். இங்ஙனம் பல யாண்டுகட்கு ஒருமுறை புனல் பெருகும் அந்தப் பாலியாற்றை யுள்ளிட்ட அந்த நாட்டின் யாறுகட்கும் ஒரு தனிச்சிறப்புப் பேசுகின்ற இக் கச்சியப்ப முனிவருடைய வித்தகப் புலமையை இதோ வருகின்ற செய்யுளை ஓதிக் காண்மின்! :

"கோண் முறை பிறழ்ந்து மாரிக் குளிர்பெயல் வறக்கு மேனும்
 தாண்முறை தப்பா வண்ணம் ததைமண லகழுந் தோறும்
 ஊண்முறைப் புனல்வந் தோடும் ஒலிநதிக் குலத்தா லேனை
 வீண்முறை நாட்டை யெல்லாம் வீழ்த்தது தொண்டை நாடு."

[திருநாட் - 3]

ஆம் உண்மையே! உண்மை! அந்த நாட்டின் யாறுகள் பெருக்கற்றுப் புழுதி புரண்டு கிடக்கின்ற காலத்திலேயும் தம் மருங்கி லமைந்த மருதப்பரப்பிற்கு வேண்டுமளவு நீர் வழங்கும் வண்மை யுடையனவாகவே இருக்கின்றன. எங்ஙனமெனின், உழவர்கள் மணலாகிக் கிடக்கின்ற அந்த யாறுகளின் இடையே ஓரிரு கல்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்