முகப்பு தொடக்கம்
"உடம்புபிணி யாலிற வுஞற்றற மிகந்து
 மடம்படவு ளம்பொருள்கண் மற்றுமுகு மாற்றால்
 விடம்புரையும் வேசையர் விழைச்சென வுணர்ந்தும்
 உடம்படுவ ரென்னிலவ ருய்க்குநலன் எற்றே !"

என அந்தப் பொய்ம்மாயப் புலைமகளிரால் விளையும் கேட்டையும் எத்துணை நயம்பட எடுத்தோதுகின்றார் காண்மின். இவ்வாறு பரத்தையர் திறம் பேசும்போது இவர்தம் ஆசிரியராகிய சிவஞான முனிவர் செய்யுள் ஒன்றும் நம் நினைவிலெழுகின்றது; அது வருமாறு :

"தவமறைக் கிழவன் மாயோன் தாணுவென் றிவரு மிவ்வூர்
 கவர்மனப் பரத்தை மாதர் கண்வலைப் பட்டே யின்றும்
 இவறிய வலரோன் மாலோன் பித்தனென் றிப்பேர் பெற்றார்
 சிவசிவ யாவ ரேயோ வவர்திறத் தகப்ப டாதார்"

என்பர் அப் பெரியார். இதன்கண் சிவசிவ என்று இவர் இரங்கும் சொற்கள் நம்முள்ளத்தைத் தொடுகின்றன. ஆயினும் மறைக் கிழவனும் மாயனும் தாணும் எங்குப் பரத்தை மாதர் கண்வலைப் பட்டார் ? இது நிற்க.

இனி, சிவ! சிவ! இத்தணிகைநகர்க் கவர்மனப் பரத்தை மாதர் சேரியில் யாம் நிற்றலும் தீதேயாம். விரைந்து இந்நகர் அங்காடித் தெருவை யணுகுவோம். இந்த அங்காடித் தெரு வணிகர் நந்தண்டமிழ் நாட்டில் சங்ககாலத்திலே வாழ்ந்த வணிகப் பெருங்குடி மக்கள் வழித்தோன்றல்கள் என்பதில் ஐயம் சிறிதுமில்லை. எற்றாலெனின், நம் பழைய வணிகப் பெருங்குடி மக்கள்,

"நெடுநுகத்துப் பகல்போல
 நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
 வடுவஞ்சி வாய்மொழிந்து
 தமவும்பிறவும் ஒப்பநாடிக்
 கொள்வதூஉ மிகைகொளாது
 கொடுப்பதூஉங் குறைகொடாது
 பல்பண்டம் பகர்ந்துவீசும்"        

(பட்டின - 207 - 19)

பண்புடையோரல்லரோ ! அவர்தம் பெருந்தகைமையை யாம் பட்டினப்பாலையிற் பார்த்து மகிழ்ந்திருக்கின்றோமல்லமோ ? இக் கச்சியப்பர் திருத்தணிகையினும் அந்தப் பெருந்தகை வணிகரே வாணிகஞ் செய்கின்றனர். என்னை ? இங்கும்,

"மடுக்குங் காலையிற் குறைய வாங்கியும்
 விடுக்குங் காலை மிதப்ப நல்கியும்
 அடுக்கும் செல்வம்விண் ணரசு மேசற
 எடுக்கும் பண்பினர் யாரு மென்பவே."

(திருநகரம் - 88)

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்