முகப்பு தொடக்கம்

இத்தகைய மக்கட் பண்பு மிக்க வாணிகரை இற்றை நாள் இந்த நாடு முழுதும் இழந்து விட்டமை கருதி வருந்துகின்றோம். இத் தணிகைப் பெருநகரத்துக் கடைத் தெருவில் இல்லாத பொருள் உலகில் வேறெங்குமில்லையாம். இந் நகர வாணிகர் ஊக்கம் பெரிதுமுடையார். அவர்பால் மடி என்பதே கிடையாது. ஒரே ஒரு செய்தியில் மட்டும் அவர் அனைவரும் மிகச் சோர்வுடையரா யிருப்பர் என்கின்றார் முனிவர். எதன்கண்? இதோ அவரே கூறுகின்றார் கேண்மின் !

"பொன்னும் வெள்ளியும் பூணு மாடையும்
 மின்னு பன்மணி விராய கோவையும்
 என்ன வேண்டினும் இல்லை என்னும்அச்
 சொன்னி கழ்த்திடாச் சோர்வங் குள்ளதே"

(திருநகரம் - 91)

என்பது நூலாசிரியர் கூற்று. எப்பொருளைக் கேட்டாலும் உண்டென்று விரைந்து கூறுமியல்புடைய இவ்வணிகர் யாதேனும் ஒரு பொருளை இல்லை என்று சொல்வதற்குத் தானும் ஊக்கமின்றிச் சோர்வெய்துவர் கண்டீர் ! என்று கூறிப் புன்னகை கொள்கின்றனர் இப் புலவர் பெருந்தகை. இவ் வங்காடியில் சிற்றுண்டிக் கடைகள் ஆங்காங்கே இருப்பதனை அக் கடைகளிற் செய்கின்ற பண்ணிகாரங்களின் நறுமணங்களே மிகத் தொலைவில் நிற்கின்ற நமக்கு அறிவித்து விடுகின்றன. ஆ ! ஆ ! எத்துணை இனிய மணம் ! இந்தப் பண்ணிகார மணத்தை நுகர்ந்த வுடனேயே "வாயுணர்வின் மாக்களாகிய" எம்மனோர் நாவில் நீர் ஊறிச் சொட்டுகின்றது. அப்பொழுதே காமவேளும் மலர்க்கணை சில தொடுத்துவிடுகின்றான். ஆம், இத்தகைய இனிய பண்ணி காரங்களை நம்முள்ளங் கவர்ந்த காதலியோடிருந்து தின்றால் சுவை பின்னும் சுவையுடையதாமன்றோ என்று எண்ணி இளங் காளையர் சிலர் அச் சிற்றுண்டிக் கடைகளில் சென்று அவற்றை நிரம்ப வாங்கிப் போகின்றனர். இதனை முனிவர் மிகவும் அழகாக ஓதுதல் காண்மின் !

"கனிவ ருக்கமுங் கமழ்சிற் றுண்டியும்
 இனிய விற்குந ரிடஞ்சென் முன்னரே
 நனிம ணம்புன னாவிற் றோற்றுமுன்
 பனிம லர்க்கணைப் படர்கண் தோற்றுமே"

(திருநகரம் - 95)

என்பது ஆசிரியர் கூற்று. இக்காலத்திலும் சிற்றுண்டிக் கடைகள் நகரங்களிலே இருக்கவே இருக்கின்றன. ஆயினும் அவற்றின் பண்ணிகார மணம் புறங்கமழ்த லரிது. இளங்காளையர் வயிற்றுத் தீத்தணியவே அவற்றை உண்கின்றனர். இப் பண்டங்களைத் தின்னும்போது இவர்களும் தம் காதலிமாரை நினைகின்றனர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்