எற்றிற்கு ? அவரோடு உண்ணவேண்டும் என்றெழும் அன்பினாலன்று. அவர்க்குத் தெரிந்தால் வைவரே என்னும் அச்சமே இவர்கள் காதலிமாரை நினைத்தற்குக் காரணம். இந்த அங்காடித் தெருவிற்கு அயலே இருப்பது வேளாண் மாந்தர் தெருவாம். ஈங்கு வாழுகின்ற வேளாண் மாந்தர் உழுதுண் போரும் உழுவித்துண்போருமே யாவர். இந் நூலாசிரியர் இத் தெருவினைப் பரிவுடன் நோக்கிப் பாராட்டுகின்றனர். 'உப்பிட்ட வரை உள்ளளவும் நினை' என்பது பழமொழி. உலகிற்கே உணவுப் பொருளை உண்டாக்கித் தருகின்ற இவ் வேளாளரை நன்றியுடை யார் யாவரும் அன்புடனே பாராட்டுத லியல்பேயாம். உழவினார் கைம்மடங்கின் விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் நிலை இல்லை யாகலின், பற்றற்ற இம் முனிவர் பெருமானும் தமது செந்நாவாற் பாராட்டுகின்றனர். இப் பாராட்டு அவ்வுழவர்க்கு மேலும் சிறப்பை யுண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. இவர் அவரைப் பாராட்டும் அருமையைப் பார்மின் !
| "ஆதியீ றமைந்த பொருள்சிறந் தனவென் | | றருமறை யினிதெடுத் தியம்பும் | | நீதியான் முகத்திற் சிறந்தபூங் கமல | | நிகர்த்தவிர் வேதனார் பதத்தில் | | கோதிலா தெழுந்து வரைதுலாக் கோலும் | | குளிர்ந்த செங்கோலும் வேய்ங்கோலும் | | தீதிலா மூவர் செலுத்தஏர்ச் சிறுகோல் | | செலுத்துநர் வீதிகள் பலவால்" (திருநகரம் - 101) | என்பது இம் முனிவர் உழவர்க்குக் கூறும் பாராட்டு. உழவர்க்குப் பாராட்டெடாத சான்றோர் இந்நாட்டில் யாரே யுளர் ? தெய்வப் புலவர் திருவள்ளுவனார் தாமும் "உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என்றும் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்றும் வானளாவப் புகழ்ந்து பாராட்டினர். இளங்கோவடிகளார்,
| "இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் | | உழவிடை விளைப்போர்" (நாடுகாண் - 149 - 50) | என ஏத்தினர். பின்னரும், கம்ப நாடர் முதலிய புலவர் பெரு மக்களில் யாரே இவ் வேளாண் மாந்தரை விரும்பிப் புகழாதார் ? இம் மாபெரும் புலவர் வழிவழி வந்த நம் கச்சியப்ப முனிவரும் அச் சிறப்பெலாந் தோன்றப் புகழ்கின்றனர். புதுமைப் புலவர் சுப்பிரமணிய பாரதியார் "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை |